கலை மற்றும் இலக்கிய திறன் கொண்டவர்கள், அனைத்து துறைகளிலும் இருப்பர். இவர்களின் படைப்புகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவர்களில் பரசுராம நாயக்கும் ஒருவர்.
போலீஸ் துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பலருக்குள், ஓவியம் வரைவது, பாடுவது, பாடல் எழுதுவது, கதை, கவிதைகள் எழுதுவது என, பல திறமைகள் ஒளிந்திருக்கும். சிலர் மட்டுமே திறமைகளை வெளிப்படுத்தி ஜொலிப்பர்.
பெலகாவி மூடலகியின் ஹொசட்டி கிராமத்தில் வசிப்பவர் பரசுராம். இவர் 21 வயதிலேயே, என்.டி.ஏ., எனும் நேஷனல் டிபென்ஸ் அகாடமியில் படிப்பை முடித்து, 1995ல் ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது கர்னலாக பதவி வகிக்கிறார். 11 ஆண்டு காலம், இமயமலை பகுதிகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இமயமலையில் சாது, சன்னியாசிகள், யோகிகள், புத்த மத துறவிகள் தரிசனம் பெற்றவர்.
நாளடைவில் பரசுராமுக்குள், ஓவியத்திறன் துளிர் விட்டது. துப்பாக்கி ஏந்திய கை, துாரிகை பிடித்தது. மனதில் தோன்றிய காட்சிகளை, ஓவியங்களாக உருவாக்கினார். இதுவரை 2,000 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓவியங்களை பார்த்து மயங்காதவர்களே இருக்க முடியாது. கிராமிய கலைகள், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிராமிய கலைகளை உலகுக்கு அறிமுகம் செய்வதில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு ஓவியமும் உயிரோட்டம் கொண்டுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் லலிதகலா அகாடமி, சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த ஓவிய கண்காட்சியில், பரசுராம் ஓவியங்கள் இடம் பெற்றன. கலை ஆர்வலர்களின் கண்களுக்கு விருந்தளித்தன.
பூனாவின் பாலகந்தர்வ கேலரி, டேராடூனின் ஐ.எம்.ஏ., ஹால், ராஜஸ்தான், புதுடில்லி உட்பட வெளி நாடுகளிலும் கூட கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.
பரசுராம் வரைந்த ஓவியங்கள் பற்றிய தகவல் அறிய விரும்பினால், வாங்க விரும்பினால், 74161 50425 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கர்னல் பரசுராம் கூறியதாவது:
எனக்கு மாணவர் பருவத்திலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. காகிதம், சுவர்கள், திண்ணை என நினைத்த இடங்களில் சிலேட் குச்சி பயன்படுத்தி, ஓவியம் வரைவேன்.
ஓவிய படிப்பில், பட்டப்படிப்பு படிக்கவில்லை என்றாலும், எனக்குள் கலைஞன் உருவாக துவங்கினான். இப்போதும் கூட, ஓய்வு நேரத்தில் துாரிகையை கையில் எடுக்கிறேன். என்னை பொருத்த வரை, ஓவியமும் ஒரு விதமான தவம்.
ஓய்வு பெற்ற ஆசிரியரான என் தந்தை நாயக், நண்பர்கள் மாருதி தாசன்னவரா, ஹிரேமத், சச்சின் நாத் என, பலரும் என் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தினர். நான் வரைந்த ஓவியங்கள், ஆன்லைன் வழியாகவும் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.
இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் உள்ள, கலை ரசிகர்களும், எனக்கு விருது கொடுத்து கவுரவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்