புதுடெல்லி: மலைகள் நிறைந்த இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா நகரில், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் கடந்த 2017-ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘விஷன் 2041’ என்ற பெயரில் சிம்லா வளர்ச்சி திட்டத்துக்கு மாநில அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கியது. இது 2017-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உள்ளது எனக் கூறி தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.
இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு வரைவு அறிக்கை வெளியிட்டது. அதில், 97 பேர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக மாநில அரசு கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஜே.பி.பர்திவாலா அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வளர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு நடுவே சமநிலையை பராமரிக்க வேண்டியது அவசியம். இந்த கோணத்தில் இந்த திட்டத்தை நாங்கள் ஆய்வு செய்கிறோம். இந்த வழக்கு ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.