இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது. ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி அதிருப்தி தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் இருந்து பிரிந்த விராட் கோலி!
2006-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்ததில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தொடரின் கடைசிப் போட்டியில் வெற்றி பெறவே இந்திய அணி விரும்புகிறது. இந்த சூழலில், மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான அணியுடன் விராட் கோலி டிரினிடாட் செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் ஓய்வெடுப்பார் எனத் தெரிகிறது. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஒரு சில தகவல்களின்படி போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு
இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் அந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில், முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் பேட்டிங் செய்யவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறைந்த ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதன் காரணமாக விராட் கோலி பேட்டிங்கிற்கு அனுப்பப்படவில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கும் விளையாடினார்.
சமநிலையில் தொடர்
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.