ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் நிரப்பப்பட்ட விவகாரம் அதிர்வலைகளைக் கிளப்பி, பெரும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் தனது வகுப்பில் பை மற்றும் தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
திரும்பி வந்து, பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசுவதை உணர்ந்திருக்கிறார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் சிறுநீரை தண்ணீர் பாட்டிலில் பிடித்து வைத்திருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். மேலும், அவரது பையில் ஒரு லவ் லெட்டரும் இருந்திருக்கிறது. அதையடுத்து அந்தச் சிறுமி உடனே இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டிருக்கிறார். ஆனால், தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், இன்று நேரில் சென்று புகாரளித்திருக்கின்றனர். அப்போதும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கொந்தளித்த கிராம மக்கள், குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்களின் வீடுகளை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் நெருங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். அதனால், மக்களுக்கும், காவல்துறைக்கும் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, கிராம மக்கள் காவல்துறையினர்மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதனால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்ததாகக் கூறப்படுகிறது. “இதுவரை பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்பதால், வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.