உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில், காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும், வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வுசெய்வதற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கி.பி 1,500-ம் ஆண்டிலிருந்து மசூதி இருக்கிறது. இப்போது சுமார் 30 பேர் மசூதியைத் தோண்டி ஆய்வுசெய்கிறார்கள். இதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்றார். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வாரணாசி நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே ஆய்வுசெய்யப்படுகிறது. அறிவியல்பூர்வமாக ரேடார் தொழில்நுட்பத்தில் ஆய்வு நடத்தப்படும்” என்றார். இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், வாரணாசி நீதிமன்றத்தின் ஆய்வு தொடர்பான உத்தரவுக்கு, இந்த மாதம் 31-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கில், அடுத்த மாதம் மூன்றாம் தேதி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவிருக்கிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், “வாரணாசியில் இருக்கும் மசூதியை `ஞானவாபி மசூதி’ என்று அழைத்தால் தகராறு ஏற்படும். யாருக்கு கடவுளின் அனுகிரகம் இருக்கிறதோ, அவர்களின் பார்வைக்கு அது தெரியும் என நினைக்கிறேன். ஒரு மசூதிக்குள் நாங்கள் வைக்காமல் அங்கே திரிசூலம் எப்படி வந்தது. ஜோதிர்லிங்கம் போன்ற சிலைகள் அங்கு இருக்கின்றன. அவற்றுக்கு அங்கே என்ன வேலை… எனவே, முஸ்லிம் சமூகத்திடமிருந்து ஒரு வரலாற்றுத் தவறு நடந்திருக்கிறது. அதற்கான தீர்வு எமக்குத் தேவை எனக் கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய பேச்சுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவரும், எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி, “அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏ.எஸ்.ஐ கணக்கெடுப்புக்கு முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை முதல்வர் ஆதித்யநாத் அறிவார். இன்னும் சில நாள்களில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிக்கொண்டிருக்கிறார். இது நீதிமன்ற விதிமீறல்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.