இஸ்லாமாபாத்:வரவிருக்கும் பொது தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார் என, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் நிறுவன தலைவருமான நவாஸ் ஷெரீப், 73, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அவருக்கு நான்கு வார ஜாமின் அளிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்ற நவாஸ் இதுவரை நாடு திரும்பவில்லை.
பாகிஸ்தான் பிரதமராக தற்போது பதவி வகித்து வரும் ஷெபாஸ் ஷெரீப்பின் பதவிக் காலம் ஆக்., 12ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் அந்நாட்டில் விரைவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.
”இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார்,” என, பிரதமர் ஷெபாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 முதல் லண்டனில் வசித்து வரும் நவாஸ், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement