மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே ஷாபூர் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. அதாவது சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரம்மாண்ட கிர்டர் இயந்திரம் ஒன்று சரிந்து பாலத்தின் ஸ்லாப் மீது விழுந்துள்ளது.
இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். இது ஷாபூரில் உள்ள குடாடி சர்லாமே கிராமத்திற்கு அருகில் என்பது கவனிக்கத்தக்கது. தகவலறிந்து விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 6 பேர் ராட்சத இயந்திரத்திற்கு அடியில் சிக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.