சென்னை: சென்னை – தாம்பரம் பகுதியை அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகளான சோட்டா வினோத் (35) மற்றும் ரமேஷ் (28) மீது காவல் துறையினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
காரணை புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் போலீஸாரை வெட்டிய ரவுடிகள் இருவரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போலீஸார் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் சோதனை பணியில் இருந்த நேரத்தில் வேகமாக கருப்பு நிற கார் ஒன்று வந்துள்ளது. அந்தக் காரை போலீஸார் நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்று காவல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல சென்று, காவல் ரோந்து வாகனத்தில் மோதி நின்றுள்ளது.
தொடர்ந்து அதிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய நான்கு ரவுடிகள், போலீஸாரை தாக்கியுள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்துள்ளார். போலீஸார் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக இருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயலுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.