பெங்களூரு: கர்நாடக கவர்னரை ஏற்ற மறுத்து விமானம் பறந்த சர்ச்சையில், ‘ஏர் ஏசியா’ நிறுவன மேலாளரை, ஒரு மாதத்துக்கு அந்நிறுவனம்,- ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னராக தாவர்சந்த் கெலாட் உள்ளார்.
இவர், கடந்த ஜூலை 27ல், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார்.
விமான நிலைய தகவல்படி, மதியம் 2:05 மணிக்கு பெங்களூரில் இருந்து ஹைதராபாத் புறப்பட, ஏர் ஏசியா விமானம் தயாராக இருந்தது.
ஆனால், கவர்னர் 2:01க்கு வந்ததாகவும், பாதுகாப்பு சோதனைகள் எல்லாம் முடிந்து விட்டதால், அவரை விமானத்தில் ஏற அனுமதிக்க முடியாது எனவும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அவரை ஏற்றாமல், விமானம் ஹைதராபாதுக்கு புறப்பட்டது. ஆனால், கவர்னர் தரப்பு, தாங்கள் 1:35 மணிக்கே விமான நிலையம் வந்து விட்டதாக மறுப்பு தெரிவித்ததுடன், தேவனஹள்ளி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தது.
இதையடுத்து, ஏர் ஏசியா விமான நிறுவனம் கவர்னரிடம் மன்னிப்பு கோரியது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய விமான நிறுவன அதிகாரிகள், ஏர் ஏசியா பெங்களூரு விமான நிலைய மேலாளரை ஒரு மாதத்துக்கு, ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது.
இந்த விவகாரத்தில், மேலும் இரு ஊழியர்களிடம் விசாரித்து, அவர்களையும் சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, கவர்னரை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்