தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் வாங்கியவர் ஷங்கர். இவருடைய முதல் படம் `ஜென்டில்மேன்’ திரைக்கு வந்து 30 வருடங்கள் ஆகின்றன. இதை இணையத்தில் `30 Years of Shankar’ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் `ஜென்டில்மேன்’ படத்தின் ஹீரோயின் மதுபாலாவிடம் படம் குறித்த நினைவுகளுக்காகப் பேசினோம்.
”நான் ரொம்ப லக்கின்னு பீல் பண்ணுறேன். ஏன்னா, இந்திய சினிமாவில் பலருடைய முதல் படத்தில் நான் வேலை செஞ்சிருக்கேன். ‘ரோஜா’ படத்தைப் பற்றி ரஹ்மான் சார் பேசும்போது ‘சின்ன சின்ன ஆசை’ பாட்டைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அப்போ, என்னுடைய முகம் கண்டிப்பாக வரும். துல்கர் சல்மான் தமிழில் அறிமுகமான ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் நடித்திருந்தேன். ஷங்கர் சார் முதல் படமும் என்கூட. முப்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதை. என் நினைவில் இருக்கிறதைப் பகிர்ந்துக்கிறேன். ஷங்கர் சார் எங்க மீட் பண்ணி கதை சொன்னார்னு எனக்கு ஞாபகம் இல்லை. ஆனா, இந்தப் படம் தயாரிப்பாளர் குஞ்சுமோன் சார் மூலம் என்கிட்ட வந்தது. படத்தோட ஒன் லைன் கேட்ட உடனே ஓகே சொல்லிட்டேன். படத்தின் ஸ்கிரிப்ட்டும் பிடிச்சிருந்தது.
படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த சில விஷயங்கள் ஞாபகம் இருக்கு. படத்தில் பிராமணப் பெண்ணா நடிச்சிருப்பேன். அடிப்படையில, நானொரு பிராமணப் பெண்ணா இருந்தாலும், மும்பையில் செட்டிலாகி இருந்ததனால என்னுடைய பாடி லாங்குவேஜ் எப்பவும் அப்படி இருந்ததில்லை. இதனால் படத்துல அந்த பாடி லாங்குவேஜ் எல்லாம் ஷங்கர் சார்தான் நடித்துக் காட்டினார். அப்பளம் போடுற காட்சி எடுக்கும் போது எப்படி உட்காரணும், நடக்கணும், பேசணும்னு நடித்துக் காட்டினார்.
பாடி லாங்குவேஜ், ஷங்கர் சாரைப் பார்த்துக் கத்துக்கிட்டேன். இந்தப் படத்துக்கு முன்னாடியே பாலசந்தர் மற்றும் மணி சார் ரெண்டு பேருகிட்ட வொர்க் பண்ணியிருக்கேன். கே.பி சார்கிட்ட வேலை பார்த்தப்போ புதுசா இருந்தேன். கேமரா முன்னாடி நிக்கிறது, பேசுறது, லைட்டிங் வாங்கிறது எல்லாம் சொல்லிக் கொடுத்தார். மணி சார் காட்சியை விளங்க வைப்பார். அப்புறம், நாம எப்படிப் பண்ணுறோம்னு பார்ப்பார். அதுக்கு அப்புறம், நம்ம நடிப்பைப் பார்த்துவிட்டு ’கொஞ்சம் ஜாஸ்தி வேணும், இந்த இடத்தில் எமோஷனை கண்ட்ரோல் பண்ணுங்க’ன்னு கரெக்ஷன்ஸ் சொல்லுவார்.
ஆனா, முதல் முறையாக எனக்கு ஒரு முழுக் காட்சியையும் நடித்துக் காட்டியவர் இயக்குநர் ஷங்கர் சார்தான். எனக்கு அது ரொம்பப் புதுசா இருந்தது. படத்துல கமிட்டான போது 30 வருஷத்துக்கு அப்புறம்கூட பேசப்படும் படமாக இருக்கும்னு எல்லாம் நான் எதிர்பார்க்கல.
‘ஒட்டகத்த கட்டிக்கோ’, ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ பாட்டெல்லாம் செம ஹிட்டாச்சு. முக்கியமா, குற்றாலத்தில் பாட்டோட ஷூட்டிங் நடந்தபோது காற்றில் பறந்து போற அளவுக்குதான் உடல் எடை இருந்தது. படத்தில் செந்தில், கவுண்டமணி சாரின் காமெடி போர்ஷன் எடுக்கும் போதே நமக்கும் சிரிப்பு வந்துரும். இவங்க ரெண்டு பேர் கூட எனக்கும் காமெடி போர்ஷன்ஸ் வைத்திருந்தார் ஷங்கர் சார்.
இந்தப் படத்துக்குப் பிறகு ஷங்கர் சார் கூட பெருசா டச்ல இல்ல. ஏன்னா, சினிமா துறையில் நான் யார்கிட்டேயும் பர்சனல் ரிலேஷன்ஷிப் வெச்சிக்கிட்டது கிடையாது. பிரைவேட் லைப்பில் வாழ்ந்துட்டிருப்பேன். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்னு எல்லா மொழிகளிலும் பிஸியாக இருந்த நேரமது. அப்புறம் திருமணம் முடிஞ்சு மும்பையில் செட்டிலாகிவிட்டோம். பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் சினிமா கரியரைத் திரும்ப ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். ரொம்ப ஹேப்பியா இருக்கு!” என்றார் நெகிழ்ச்சியுடன்.