கோலாரில் இருந்து ராஜஸ்தானுக்கு சென்ற போது தக்காளி லாரி குஜராத்தில் கண்டுபிடிப்பு -பணத்துடன் டிரைவர் தப்பியோட்டம்

கோலார்:-

தக்காளி விலை உயர்வு

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கர்நாடகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் அதன் விலை ரூ.80 ஆக குறைந்தது. மீண்டும் தக்காளி விலை ரூ.160 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால் திருடர்களும் தக்காளியை திருடி விற்று வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், கர்நாடகத்தில் தக்காளியை விற்பனைக்காக கொண்டு சென்ற லாரியுடன் டிரைவர், கிளீனர் மாயமான சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;-

தக்காளி ஏற்றிச் சென்ற லாரி மாயம்

கோலார் டவுனில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் உள்ளது. இது நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய தக்காளி சந்தை ஆகும். இங்கு தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருபவர்கள் சக்லைன், முனிரெட்டி. இவர்கள் இருவரும் கடந்த 27-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மேத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சொந்தமான லாரியில் ரூ.21 லட்சம் மதிப்பிலான 11 டன் தக்காளி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பிவைத்தனர். லாரியை அன்வர் என்பவர் ஓட்டிச் சென்றார்.

அந்த தக்காளி சனிக்கிழமை சென்றடைந்து இருக்க வேண்டும். ஆனால் சனிக்கிழமை மதியத்திற்கு பிறகு வியாபாரிகள் இருவரும், டிரைவர் அன்வரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் தக்காளியும் ஜெய்ப்பூரில் உள்ள வியாபாரிக்கு கிடைக்கவில்லை.

குஜராத்தில் கண்டுபிடிப்பு

இதனால் சந்தேகமடைந்த சக்லைன், முனிரெட்டி ஆகியோர் கோலார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாயமானதாக தேடப்பட்ட லாரி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை மையத்தில் கேட்பாரற்று நின்றது தெரியவந்தது. மேலும் லாரியில் தக்காளி எதுவும் இல்லை.

மேலும் டிரைவர் மாயமாகி இருந்தார். லாரியில் கொண்டு சென்ற தக்காளியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த வியாபாரி பிரகாஷ் என்பவரிடம் டிரைவர் அக்பர் விற்றதும், அந்த பணத்துடன் தலைமறைவானதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த லாரியை, ராஜஸ்தான் போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் மேத் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சாதிக், குஜராத் சென்று அங்குள்ள போலீசில் புகார் அளிக்க புறப்பட்டு சென்றுள்ளார்.

டிரைவர் உள்பட 6 பேருக்கு தொடர்பு

இந்த சம்பவத்தில், லாரி டிரைவர், லாரி உரிமையாளர், இடைத்தரகர் உள்பட 6 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் கர்நாடகத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.