தமிழ் திரையுலகில் 80 -களின் காலகட்டத்தில் வெற்றி வாகை சூடிய பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ராஜ்கிரண்.
அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்வதை ராஜ்கிரண் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், இஸ்லாமிய சமூகத்தின் எதார்த்த குணம் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்து இருக்கின்றார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவர் வெளியிட்டிருந்த அந்தப்பதிவில், “ இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல. ‘இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்’ பொறுமை காக்க வேண்டும் என்று இறைவனின் இறுதி தூதுவர் இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால் பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்.
இந்தப்பொறுமையை தவறாகப்புரிந்து கொண்டு கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.