Indian Cricket Team Updates: 23 வயதேயான இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு உறுதியான வீரர் ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. திறமையானவராக இருந்தாலும், இந்த அதிரடி வீரர் இந்திய அணியில் நீண்ட காலமாக தனக்கான இடத்தை பிடிக்க தடுமாறி வருகிறார்.
மீண்டும் ஒருமுறை இந்த வீரர் இந்திய அணியின் தேர்வாளர்களால் ஒதுக்கப்பட்டார். இந்த வீரரை இந்திய அணியில் தேர்வு செய்ய ஒரு தேர்வாளர் கூட தயாராக இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீரர் இந்திய அணியில் பிடிக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தாலும் இந்த வீரருக்கு வாய்ப்பளிக்க தேர்வாளர்கள் தயாராக இல்லை. இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் பேட்டிங் ஸ்டைலை இந்த வீரரின் பேட்டிங்கிலும் நீங்கள் காணலாம்.
அந்த வீரர் வேறு யாரும் இல்லை, அதிரடி ஓப்பனிங் பேட்டரான பிருத்வி ஷா தான். நேற்று அறிவிக்கப்பட்ட அயர்லாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை குவித்தாலும், பிருத்வி ஷா இந்திய அணியில் வாய்ப்பிற்காக அணிக்கு வெளியே அமர்ந்து காத்திருக்கிறார். வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி நிர்வாகம் ரோஹித் ஷர்மாவின் பேக்அப்பை தயார் செய்ய வேண்டும்.
பிருத்வி ஷா பேட்டிங்கில் ரோஹித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேன் எனலாம். ஆனால் தேர்வாளர்கள் அவரை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்காதது இந்திய அணியில் அவருக்கான கதவுகள் மூடப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.
பிருத்வி ஷா சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணி நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். பிருத்வி ஷா இதுவரை இந்திய அணிக்காக 5 டெஸ்டில் விளையாடி 1 சதம், 2 அரைசதம் உட்பட 339 ரன்கள் குவித்துள்ளார். பிருத்வி ஷாவின் சிறந்த டெஸ்ட் ஸ்கோரானது 134 ரன்கள். பிருத்வி ஷா 44 முதல் தர போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 16 அரை சதங்கள் உட்பட 3802 ரன்கள் எடுத்துள்ளார். பிருத்வி ஷா மிகவும் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். ஒருநாள் கிரிக்கெட் பாணியில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் பிருத்வி ஷாவும் ஒருவர். முதல் தர போட்டிகளில் பிரித்வி ஷாவின் சிறந்த ஸ்கோர் 379 ரன்கள்.
ரோஹித் சர்மாவின் ஆதிக்கம்
தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் ஆதிக்கம் அதிகம். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் இடம் நிர்ணயம் செய்யப்பட்டதால் பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா குறித்து பார்த்தோமானால், அவர் பெரிய போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறார்.
கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2022 டி20 உலகக் கோப்பை, கடந்தாண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய 2022 ஆசியக் கோப்பை மற்றும் இந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி போன்ற பெரிய போட்டிகளில் ரோஹித் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இதுபோன்ற சூழ்நிலையில், 2023 உலகக் கோப்பையை மனதில் வைத்து, இந்திய அணி நிர்வாகம் பிருத்வி ஷா போன்ற திறமையான பேட்ஸ்மேனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பிருத்வி ஷாவின் பேட்டிங்கில் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரை காணலாம் என்று கூறியுள்ளார். ரோஹித் ஷர்மாவைப் போல பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறமையும் பிருத்வி ஷாவுக்கு உண்டு. 2023 உலகக் கோப்பையை மனதில் வைத்து, பிருத்வி ஷா போன்ற திறமையான பேட்ஸ்மேனை தயார்படுத்த வேண்டிய அவசியம் பிசிசிஐக்கு உள்ளது.