மணிப்பூருக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு… ரூ.10 கோடி மதிப்பில் ஏற்பாடு… ஸ்டாலின் எழுதிய கடிதம்!

மணிப்பூர் கலவரம் தொடர்பான செய்திகள் தினசரி தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. கடந்த மாதம் வெளியான வீடியோ ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது. இது ஒன்றே வன்முறை களத்தின் தீவிரத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. பலர் வீடுகளை இழந்து, தங்கள் உறவுகளை பறிகொடுத்து தவித்து கொண்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் நடவடிக்கை எப்போது

மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம்

இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர்

கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மணிப்பூரில் இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி. இவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நிவாரண முகாம்களில் தவிப்பு

தற்போதைய சூழலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி எனது கவனத்திற்கு வந்தது. இத்தகைய இக்கட்டான நேரத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.

ரூ.10 கோடி மதிப்பில் பொருட்கள்

அதில், தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசு வலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்றவை இடம்பெறும். இவற்றை அனுப்பி வைப்பதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு போதிய உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மணிப்பூர் முதலமைச்சர் ஒப்புதல் வேண்டும்

தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசு தங்களின் ஒப்புதலை வழங்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு அடுத்தகட்ட ஏற்பாடுகள்

இதன் மூலம் தமிழக அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகள் உடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வர். மேலும் நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப முடியும் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.