மோடி பேசப் போகிறார்… நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் ரெடி… தேதி குறிச்ச மக்களவை!

பிரதமர் மோடி எப்போது வாய் திறக்கப் போகிறார்? என ஒட்டுமொத்த நாடும் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது. மணிப்பூரில் வன்முறை, மோதல், கொலை, பாலியல் வன்கொடுமை என நினைத்து பார்க்க முடியாத ஏராளமான விஷயங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த மாதம் வெளியான ஒற்றை வீடியோ, மணிப்பூரின் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. தற்போது வரை நிலைமை கட்டுக்குள் வரவில்லை.

மணிப்பூர் விவகாரம்

மணிப்பூரில் ஆட்சியில் இருப்பதும் பாஜக தான். மத்தியில் ஆட்சி செய்து வருவதும் பாஜக தான். டபுள் எஞ்சின் அரசு என பெருமை பேசி வரும் பாஜக, ஏன் இப்படி கோட்டை விட்டது என்ற கேள்வி எழாமல் இல்லை. மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி ஒரு வருத்தமோ, கண்டனமோ, நேரில் சென்று ஆய்வோ என எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியினர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வாய் திறக்காத பிரதமர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் அங்கும் பிரதமர் வாய் திறக்கவில்லை. வீடியோ வெளியாகி விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதுவும் 78 நாட்கள் கழித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசினார். ஆனால் மக்களவையில் பேசலாமே? எங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன. விரிவாக விவாதிக்கலாமே? எனக் கேள்விக் கணைகளால் எதிர்க்கட்சிகள் துளைத்து எடுத்தனர்.

எதிர்க்கட்சிகள் அமளி

மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் தொடர் அமளி துமளி சம்பவங்கள் தான். மோடி பேச வேண்டும். மணிப்பூர் விஷயத்தில் முதலில் எதிர்பார்ப்பது இதைத் தான் என்ற குரல் வலுக்கத் தொடங்கியுள்ளது. இப்படியே விட்டால் சரிவராது என்று கருதி ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் கடந்த ஜூலை 26ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானம் தோல்வியை தழுவும் என்று நன்றாக தெரியும்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

இருப்பினும் இதுதொடர்பான விவாதத்தின் போது பிரதமர் வந்து தானே ஆக வேண்டும். அப்போது பேசித் தானே ஆக வேண்டும் என கணக்கு போட்டு காய் நகர்த்தினர். இந்த நோட்டீஸை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறினார். தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

மக்களவையில் விவாதம்

வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும். மொத்தம் 3 நாட்கள் நடக்கும். கடைசி நாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாக எதிர்க்கட்சிகள் நினைத்தது நடக்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.