புனே திலக் சமர்க் மந்திர் டிரஸ்ட் சார்பாக லோக்மான்ய திலகரை கவுரவிக்கும் விதமாக லோக்மான்ய திலக் விருது (Lokmanya Tilak Award) உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இவ்விருது வழங்கும் விழா இன்று புனேயில் நடந்தது. இந்த விழாவிற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வரும்படி அழைக்கப்பட்டு இருந்தார். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சரத் பவாரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்காக சரத் பவாரை நேரில் சந்தித்து பேச காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு நாள்களாக முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் சரத் பவார் அவர்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்கவே இல்லை. இன்று காலையில் புனே வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து புனேயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தக்துஷேத் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பிரதமரின் வருகையையொட்டி நகரில் அதிகமான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஏராளமான சாலைகள் மூடப்பட்டது. சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
புனேயில் உள்ள எஸ்பி கல்லூரி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சரத் பவார் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் சொன்னபடி சரத் பவார் விழாவில் கலந்து கொண்டதோடு பிரதமர் மோடிக்கு லோக்மான்ய திலக் விருதை வழங்கி கவுரவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு முதல் முறையாக அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்றார். சரத் பவார் வழங்கிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக மோடி தெரிவித்தார்.
அவர் மேலும், “நாட்டின் சுதந்திர போராட்டத்தை சில வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. லோக்மான்ய திலக் இளம் தலைமுறையினரை அடையாளம் காண்பதில் சிறந்து விளங்கினார். அப்படி அடையாளம் காணப்பட்டவர்தான் வீர் சாவர்க்கர். சத்ரபதி சிவாஜி, சாவித்ரிபாய் புலே, ஜோதிபாய்புலே ஆகியோரின் புண்ணிய பூமியான புனேவிற்கு தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்தார்.
அதோடு லோக்மான்ய திலக் நாட்டின் சுதந்திரத்திற்கு ஆற்றிய பங்கு குறித்து நினைவு கூர்ந்தார். முன்னதாக இவ்விழாவில் பேசிய சரத் பவார், `சத்ரபதி சிவாஜி யாரது நிலத்தையும் அபகரித்தது கிடையாது’ என்று பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் உடைய பா.ஜ.க. முக்கிய காரணமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சரத் பவார் 7 ஆண்டுகளுக்கு முன்பு மோடியுடன் ஒரே மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.