புதுடெல்லி: “மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயார். ஆனால், அதற்கு முன்பாக இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” என்று காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா, மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார். இதனை நாங்கள் மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரிடமே தெரிவித்திருக்கிறோம். ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது அவையில் பிரதமர் இருக்க வேண்டும். அவர் இது குறித்து பேச வேண்டும். இந்த விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் எப்போது பேசுவார்? விவாதத்தில் பங்கேற்காமல் ஏன் அவர் ஓடுகிறார்?
நாடாளுமன்ற அமளி எப்போது முடிவுக்கு வரும் என கேட்கிறீர்கள். இது குறித்து நீங்கள் ஆளும் கட்சியான பாஜகவிடம்தான் கேட்க வேண்டும். மணிப்பூர் தொடர்பாக எப்போது அவர்கள் பேசுவார்கள்? கடந்த 90 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது. எதிர்பார்க்க முடியாத சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெறும் 30 நொடிகள் மட்டுமே பேசி இருக்கிறார். மணிப்பூர் குறித்து நாங்கள் விவாதிக்கத் தயார். ஆனால், அந்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பாரா? இதுதான் தற்போது விடை காணப்பட வேண்டிய கேள்வி” என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.