புதுடெல்லி: விவசாயத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு 50 சதவிகித பணம் செலுத்தினால் 60 வயதுக்குப் பின் ஓய்வூதியம் பெறலாம். இந்த தகவல், நாடாளுமன்ற மக்களவையில் டி.ரவிகுமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலாக மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து விழுப்புரம் தொகுதியின் எம்.பியான டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ”நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்களைத் தருக. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி அளித்த பதில் பின்வருமாறு: ”அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதியோர் பாதுகாப்பை வழங்குவதற்காக, இந்திய அரசு 2019-ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா(பிம் எஸ்ஒய்எம்) என்ற ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்கள் 60 வயதை அடைந்த பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கப்படுகிறது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்,
இதை, maandhan.in இணையம் மூலமாகவோ அல்லது ஏதேனும் ஒரு பொதுச் சேவை மையம்(சிஎஸ்சி) சென்று தாமே பதிவு செய்து கொள்ளலாம். நம் நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான சிஎஸ்சிக்கள் உள்ளன. இது தன்னார்வ மற்றும் பயனாளரும் பங்களிப்பு செய்வதன் அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். 18-40 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் தமது மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவர்கள் அரசு நிதியுதவிகளான ஈபிஎப், ஈஎஸ்ஐசி மற்றும் பிஎஸ் திட்டங்களில் உறுப்பினர் இல்லாதபட்சத்தில் இந்தத் திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் கீழ், 50 சதவிகித மாதாந்திர பங்களிப்பானது ரூ.55 முதல் ரூ.200 வரை, நுழைவு வயதைப் பொறுத்து பயனாளியால் செலுத்த வேண்டும். இதற்கு சமமான பங்களிப்பு ஒன்றிய அரசால் செலுத்தப்படும்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் இத்திட்டத்தின் நிதி மேலாளராக உள்ளது. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு 2020-21 அறிக்கையின்படி நாட்டில் மொத்தம் 46.5 சதவிகிதம் பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆண்கள் 39.8 சதவிகிதம், பெண்கள் 62.2 சதவிகிதம் உள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948-ன் கீழ் விவசாயம் உள்ளிட்ட வேலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவும், மதிப்பாய்வு செய்யவும், திருத்தவும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பொருத்தமான அதிகாரம் படைத்த அரசுகளாக உள்ளன. ஒரு பொருத்தமான அரசாங்கத்திலிருந்து மற்றொன்றில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் மாறுபடும்” என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.