பீஜிங்:“எந்தச் சூழ்நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா, மிகவும் நெருக்கமாக உள்ளன. தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா பிராந்தியம், ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடையே, சாலை மற்றும் கடல் வழி பாதை அமைக்கும், ‘பெல்ட் அண்ட் ரோடு முயற்சி’ என்ற திட்டத்தை, 2013ல், சீன அதிபர் ஷீ ஜின்பிங் அறிவித்தார்.
இதன் கீழ் பல்வேறு நாடுகளை சாலை மற்றும் கடல் வழியாக இணைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கான நிதி ஆதாரங்களையும் சீனா வழங்கியது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் கவாடார் துறைமுகத்தையும், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், சீனா – பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப் பாதை என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சீன துணைப் பிரதமர் ஹீ லிபெங்க் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கின் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டது. அதில், ‘எந்தச் சூழ்நிலையிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருக்கும்’ என, ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement