காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமககள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்டுத்தியுள்ளது.
ஏழை எளிய மக்கள் நோய்வாய்பட்டால் அவர்களுக்கு ஒரே புகலிடமாக இருப்பது அரசு மருத்துவமனைகள் தான். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் உழைத்து மக்களின் உயிரை காப்பாற்றும் ஏராளமான மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதே சமயத்தில், ஒருசில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப்போக்கால் சில மோசமான சம்பவங்கள் அரங்கேறுகின்ன.
அண்மையில் கூட ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அக்குழந்தையின் கை அழுகி கடைசியில் அதை நீக்கும் நிலை வந்தது. மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரமேரூரில் ஒரு பள்ளி மாணவனுக்கு இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாணவன் உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அப்போது அவனுக்கு நெஞ்சு சளியை இளக்கும் நெபுலைஸர் (Nebulizer) சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு ஆக்சிஜன் மாஸ்க் தேவை.
ஆனால், மருத்துவமனையில் அந்த நேரத்தில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.