சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக கிறிஸ்டோபர் டபிள்யூ. ஹோட்ஜஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் துணைத் தூதரகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள் வருகின்றன.
இந்த தூதரகத்தின் துணைத் தூதராக இருந்த ஜூடித் ரேவின் சமீபத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு கிறிஸ்டோபர் டபிள்யூ.ஹோட்ஜஸ் நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து துணைத் தூதராக கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ் சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்குமுன் ஆப்கானிஸ்தான் இடமாற்ற முயற்சிகளுக்கான (CARE) ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் மூத்த ஆலோசகர், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரங்களுக்கான துணை உதவி செயலர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
இதுகுறித்து துணைத் தூதர் ஹோட்ஜஸ் கூறியதாவது: அமெரிக்கா-இந்தியா இடையே நல்லுறவு நீடித்து வருகிறது.
இந்த அற்புதமான காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் அமெரிக்க பிரதிநிதியாக பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வணிகம்,கல்வி மற்றும் விண்வெளி துறைகளில் இருநாடுகளும் இணைந்து பல்வேறு சிறந்த பணிகளை செய்துவருகின்றன. இருநாடுகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதன்படி தமிழகம், கர்நாடகா, கேரளா உட்பட சென்னை துணைத் தூதரகப் பகுதிகளில் நமது உறவை வலுப்படுத்த தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.