தமிழக கோயில்களில் 10 ஆண்டுகளாக சிலை திருட்டு இல்லை: திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: தமிழகக் கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக சிலைகள் திருட்டு நடைபெறவில்லை என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோயில் சிலைகள் திருட்டு தொடர்பாக திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

2013 முதல் 2023 வரையிலான கடந்த பத்து ஆண்டுகளில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து 14 சிலைகள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 3 சிலைகள் திருடப்பட்டு 2 மீட்கப்பட்டுள்ளன. பிஹார், ஒடிசா மாநிலங்களில் இருந்து 4 சிலைகள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை எதுவும் மீட்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில் எந்த கோயில் சிலையும் களவு போகவில்லை. மேலும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 20 மாநிலங்களிலும் சிலை திருட்டு என்பது நடை பெறவில்லை.

சிலைகள் உள்ளிட்ட நமது பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் இந்திய தொல்லியல் துறை உறுதியாக உள்ளது. அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட பழங்கால பொருட்களைப் பாதுகாப்பதில் தனியார் பாதுகாப்புப் படையினர், மாநில காவல்துறையின் ஆயுதக் காவலர்கள், தேவைக்கு ஏற்ப மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஒருவேளை பழங்கால பொருட்கள் திருடப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் உடனடியாக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, கஸ்டம்ஸ் உள்ளிட்ட சட்ட அமலாக்க நிறுவனங்கள் உஷார்படுத்தப்படுகின்றன. இதனால், திருடப்பட்ட பழங்காலச் சின்னங்கள் வேறு எந்த வெளிநாட்டுக்கும் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுவது தடுக்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களான 31 தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் 27 இன்னும் மீட்கப்பட வேண்டியுள் ளது. எனினும் அவை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. திருடிச் செல்லப்பட்ட பழங்காலச் சின்னங்களை மீட்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இது மாதிரியான நமது பழைய நினைவுச் சின்னங்கள் இருப்பதாக தெரியவந்தால் தொல்லியல் துறை உடனடியாக சம்பந்தப்பட்ட நாடுகளின் இந்திய தூதரகங்களின் மூலமாக அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் நமது வெளியுறவுத் துறை மூலமாக 1976 முதல் 2023 வரை மொத்தம் 251 சிலைகள் உள்ளிட்ட பழமையான நினைவுச் சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2014 – 2023 வரையிலாக மட்டும் மீட்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை 238 ஆகும். இவ்வாறு கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.