மும்பை அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து 20 பேர் பலி

மும்பை- நாக்பூர் இடையே 701 கி.மீ. தூரத்துக்கு சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரில் விரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

3-வது கட்ட பணி

இந்த பிரமாண்ட சாலை திட்டத்தின் 2 கட்ட பணிகள் முடிந்துள்ளது. நாக்பூர்- ஷீரடி இடையே 520 கி.மீ. தூரத்துக்கு முதல் கட்டமாக அமைக்கப்பட்ட சாலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2-ம் கட்ட பணிகள் முடிந்து கடந்த மே மாதம் ஷீரடி முதல் இகத்புரி வரையிலான 80 கி.மீ. சாலையை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது 3-ம் கட்ட பணிகள் சுமாா் 100 கி.மீ.க்கு இகத்புரியில் இருந்து மும்பையை அடுத்த தானே மாவட்டம் வட்பே வரை நடந்து வருகிறது. 3-வது கட்ட பணிகளை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா சர்லாம்பே விலேஜ் பகுதியில் விரைவுச்சாலைக்காக பிரமாண்ட பாலம் கட்டும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள், ஊழியர்கள், என்ஜினீயர்கள் என பலர் ஈடுபட்டு இருந்தனர்.

ராட்சத கிரேன் சரிந்தது

நள்ளிரவை கடந்தபோது கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த ‘கிர்டர் லாஞ்சர்’ என்ற ராட்சத கிரேன் திடீரென சரிந்து பாலம் மீது பயங்கர வேகத்தில் விழுந்தது. 35 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த இந்த கிரேன் 700 டன் எடை கொண்டதாகும். இதனால் கிரேன் விழுந்த வேகத்தில் பாலம் நொறுங்கியது. பாலத்திற்காக பொருத்தப்பட்டு இருந்த இரும்பு சட்டங்களும் கீழே சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளுக்குள் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த என்ஜினீயர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதில் பலர் உடல் நசுங்கி இடிபாடுகளுக்குள்ளேயே சிக்கி சமாதி ஆனார்கள். மேலும் சிலர் இடிபாடுகளில் இருந்து மீள முடியாமல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். உயிர் தப்பிய தொழிலாளர்கள் செய்வதறியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர்.

20 பேர் உடல் நசுங்கி பலி

தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளை அகற்றி பலரை பிணமாக மீட்டனர். இதில் என்ஜினீயர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 20 பேர் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழக என்ஜினீயர்கள்

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த என்ஜினீயர்கள் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதில் ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி ஊராட்சி வி.ஐ.பி. நகரை சேர்ந்த சந்தோஷ்(வயது36) ஆவார். அவரது தந்தை இளங்கோ. என்ஜினீயரான சந்தோசிற்கு திருமணம் ஆகி ரூபி என்ற மனைவியும், 5 வயதில் ஆத்விக் என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சந்தோஷ் கட்டுமான துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். அவர் இன்னும் ஒரு மாதத்தில் சென்னைக்கு இடமாறுதலாக இருந்தார்.

உயிரிழந்த மற்றொரு என்ஜினீயர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த கண்ணன்(23) என்பது தெரியவந்தது. இவரது தந்தை வேதரத்தினம். தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த கண்ணன் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்தநிலையில் தான் தமிழகத்தை சேர்ந்த 2 என்ஜினீயர்களும் மும்பை அருகே நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.

வழக்குப்பதிவு

இதற்கிடையே கிரேன் விபத்தில் இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக 5 தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் 2 ஒப்பந்ததாரர்கள் மீது சகாப்பூர் போலீசார் மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.