Dhanush: `இளையராஜா பயோபிக்!' – ராஜாவாக நடிக்கும் தனுஷ்; தயாரிப்பாளர் இவர்தான்!

`இளையராஜாவின் வாழ்க்கை சரிதத்தைப் படமாக்குவது என் கனவு!’ என பாலிவுட் இயக்குநர் பால்கி அறிவித்திருக்கிறார். இயக்குநர் பால்கி இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது ரகசியமானதல்ல. அதை பல சந்தர்ப்பங்களில் பால்கியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஜா அடிக்கடி பிரியமுடன் சந்திக்கும் மிகச் சில திரை பிரமுகர்களில் பால்கிக்கு தனித்த இடம் உண்டு. சமீபத்தில் அவர் டைரக்ட் செய்த ஒரு படம் தவிர்த்து பால்கியின் எல்லா இந்திப் படங்களுக்கும் இளையராஜாவே ஆஸ்தான மியூசிக் டைரக்டராக இருந்திருக்கிறார். இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை, எவ்வளவு தூரம் படமாக்கும் விஷயம் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது பற்றி இளையராஜாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரிப்பைத் தொடங்கி நடத்தினோம். கிடைத்த நம்பகமான செய்திகள் இதோ….

பால்கி இளையராஜாவுடன்

இதற்கு முன்னரே தன் வாழ்க்கை வரலாற்றை இளையராஜாவே தன் கைப்பட எழுதி வருகிறார். நெருங்கிய நண்பர்களிடம் அதன் சில சுவாரஸ்யமான பகுதிகளைப் படித்து காண்பிப்பதில் அவருக்கு பெரும் ஆர்வம் உண்டு. இது அவரை சந்திக்கும் அனைவருக்கும் கிடைக்கும் அனுபவமல்ல. தனுஷ், பால்கி மற்றும் அவருடைய சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. தன் கதாபாத்திரத்தை தனுஷ் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என ராஜா நம்புகிறார். இவ்வளவு தூரம் அவரை நெருங்கிய ஹீரோக்களில் ரஜினி, கமல், தனுஷ் இடம் மட்டுமே அவருக்கு பிரியமும், மனம் விட்டு பேசுவதும் நடக்கும்.

தனுஷ் ராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதில் வாழ்நாள் கனவு என்று சொல்லும் படியான ஆர்வம் கொண்டிருக்கிறார். அவருக்கான பெரும் சம்பளம் பற்றியெல்லாம் இதில் அவர் கவலைப்படவேயில்லை. `கண்டிப்பாக நான் நடித்துக் கொடுக்கிறேன்!’ என்று ராஜாவிடம் உறுதி அளித்துவிட்டார்.

அதற்கான கதையை ராஜா எழுதி முடித்து விட்டார். அதை இறுதி செய்யும் பணியை மட்டுமே இப்போது செய்து கொண்டிருக்கிறார். பால்கி இயக்குவது மட்டும் உறுதியாகிவிட்டது.

தனுஷ் இளையராஜாவுடன்

தமிழ், தெலுங்கு, இந்தியிலும் வெளியாக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு வந்து விடுகிறார் தனுஷ். திரைக்கதையைப் பற்றி ஆலோசனை நடத்திவிட்டு மாலைதான் வீட்டிற்குத் திரும்புகிறார். மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கின்றன. நானே தயாரிக்கிறேன். எனக்கு இது கௌரவமான தயாரிப்பாக இருக்கும் என தனுஷ் சொல்லியிருக்கிறார். புது வருஷத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டால் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகி விடக்கூடும்.

தன் சிறுவயது தோற்றம் தனுஷ் உடன் ரொம்பவும் ஒத்துப் போகிறது என்பதில் ராஜா சந்தோஷமாக இருக்கிறார். தனுஷ் மாதிரியான பரம ரசிகன் தான் இதை செய்ய முடியும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் ராஜா. கடந்த நான்கு வருடங்களாகவே இந்தத் திட்டம் பேச்சுவார்த்தையிலும் கதை தயாரிப்பிலும் இருந்து வருகிறது என்பது உண்மை. இளையராஜாவின் ஆரம்ப வாழ்க்கையில் தொடங்கி நடப்பு காலம் வரையிலும் படத்தின் கதை அமைப்பு இருக்கும் என்கிறார்கள்.

இளையராஜாவாக தனுஷ் நடிப்பது பற்றிய உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.