திருமலை: திருப்பதி மலைப்பகுதியில் சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இவை அவ்வப்போது பக்தர்கள் திருமலைக்கு நடந்து செல்லும் மார்க்கங்களில் காணப்படுகின்றன.
சமீபத்தில் கர்னூலை சேர்ந்த 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி இழுத்து சென்று விட்டது. அந்த சமயத்தில் அவனது பெற்றோர், சக பக்தர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் சத்தம் போட்டு சிறுத்தையை விடாது துரத்தி சென்றதால் புதரில் அச்சிறுவனை விட்டு, விட்டு வனப்பகுதிக்குள் ஓடி சென்று விட்டது.
பக்தர்கள் செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு நடைவழி மார்க்கத்திலும் இருபுறமும் இரும்பு வேலி அமைக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் தர்மா ரெட்டி அறிவித்தார். ஆனால், இதுவரை இதற்கான பணிகள் ஏதும் தொடங்கவில்லை.
இந்நிலையில், அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பாதையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கரடி ஒன்று, கடந்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது பெரும் பீதியை கிளப்பி உள்ளது. கரடி தாக்கும் சுபாவம் கொண்ட விலங்காகும். இது சர்வ சாதாரணமாக பக்தர்கள் நடமாடும் பகுதியில் நடமாடி வருகிறது. ஆதலால், இது குறித்து உடனடியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுப்பது அவசியம் என பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.