ரக்‌ஷா பந்தனை முஸ்லிம் சகோதரிகளை சந்தித்து கொண்டாடுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘நாடு முழுவதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சகோதரிகளை சந்தித்து, சகோதரத்துவத்தை உணர்த்தும்
ரக்‌ஷா பந்தன் விழாவை கொண்டாடுங்கள்’’ என்று பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்களைப் பிரதமர் மோடி கடந்த திங்கட்கிழமை இரவு சந்தித்து உரையாடினார். அப்போது பாஜக மேலிடத் தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர். அப்போது, மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என பிரதமர் மோடியும், மேலிட நிர்வாகிகளும் எம்.பி.க்களிடம் வலியுறுத்தினர்.

மேலும், சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் விழாவை, முஸ்லிம் பெண்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் (திருமண பாதுகாப்பு மற்றும் உரிமை) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் உடனடியாக 3 முறை தலாக் கூறி முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற விவரங்களை எல்லாம் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளை சென்று சேரும் வகையில் எம்.பி.க்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என டெல்லி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

கடந்த மாதம் பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ வானொலி உரையில் பேசும்போது, ‘‘இந்த ஆண்டு 4,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள், ஆண்கள் துணையின்றி ஹஜ் புனித யாத்திரை சென்று வந்துள்ளனர். இது முஸ்லிம் மக்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன், மத்திய அரசு ஹஜ் புனித யாத்திரை தொடர்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்த பிறகு புனித யாத்திரை செல்லும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக பாஜக இப்போதே தீவிர முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது. அதன்படி, பாஜக மற்றும் கூட்டணிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை பிராந்திய அளவில் பிரித்து, சுமார் 50 எம்.பி.க்கள் கொண்ட ஒவ்வொரு குழுவாக பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.