ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொடை விழாவில் ஸ்பீக்கரில் பாட்டு இசைப்பதை நிறுத்தியதால் தி.மு.க-வைச் சேர்ந்த நகர துணைத் தலைவரும், பா.ஜ.க நிர்வாகியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீஸிடம் விசாரித்தபோது, அவர்கள் நம்மிடம், “ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு பகுதி ஊரணிப்பட்டி. இங்குள்ள கோயிலுக்கு பா.ஜ.க ஓ.பி.சி அணியைச் சேர்ந்த சிவபிரகாசம் என்பவர் நாட்டாமையாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கோயிலில் கடந்த சில நாள்களாக ஆடி கொடை விழா நடந்து வருகிறது. திருவிழாவின் இறுதிநாளான இன்று (02-08-2023), முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இதற்கான பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அதேசமயம், கொடை விழாவையொட்டி தெருவில் ஸ்பீக்கர்கள் கட்டி பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் படிவங்கள் விநியோகிப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வந்திருக்கின்றன. அப்போது அங்குவந்த அந்தப் பகுதி தி.மு.க கவுன்சிலரும், நகர்மன்ற துணைத் தலைவருமான செல்வமணி, மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப விநியோக பணிகளை தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு திட்டம் குறித்து விளக்கமளித்திருக்கிறார். இந்த நிலையில், ஸ்பீக்கரில் அதிக சத்தத்தில் பாடல்கள் இசைக்கப்பட்டதால், செல்வமணியால் சரிவர விளக்கமளிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கோயிலுக்குச் சென்ற அவர், பாட்டு இசைக்கும் கருவியை அணைத்து, ஸ்பீக்கர்களில் பாட்டு இசைப்பதை நிறுத்தியிருக்கிறார். செல்வமணியின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த கோயில் நிர்வாகத்தினர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கெனவே, கட்சிரீதியான போஸ்டர்கள், படங்கள், அலங்கார லைட்டுகள் வைப்பது தொடர்பாக சிவபிரகாசத்துக்கும், நகராட்சி துணைத் தலைவர் செல்வமணிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் கொடை விழாவுக்காக ஸ்பீக்கரில் பாட்டு இசைப்பதை செல்வமணி நிறுத்திய செயல், சிவபிரகாசத்துக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரு தரப்பினர் சார்பிலும் ஆட்கள் கூடி வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியே களேபரமாகி கோஷ்டி மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் பிரித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்த நகராட்சி துணைத் தலைவர் செல்வமணி, பா.ஜ.க ஓ.பி.சி அணி நிர்வாகி சிவபிரகாசம் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முளைப்பாரி கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து கட்சிரீதியாக ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க ஸ்ரீவில்லிப்புத்தூரில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் செல்வமணி, சிவபிரகாசம் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வளாகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார்களின்பேரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.