பிரதமர் மோடி சபைக்கு வர நான் உத்தரவிட முடியாது – மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் திட்டவட்டம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியபோது, சபாநாயகர் இருக்கையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி அமர்ந்திருந்தார். கேள்வி நேரம் நடத்தப்பட்டது.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, மக்களவை மீண்டும் கூடியது. அப்போது, சபாநாயகர் இருக்கையில் பா.ஜனதா எம்.பி. கிரித் சோலங்கி அமர்ந்திருந்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சபையின் மையப்பகுதிக்கு ஓடிச்சென்று கோஷங்களை எழுப்ப தொடங்கினர். மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

நாடாளுமன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய மந்திரிகளுக்கு கிரித் சோலங்கி அழைப்பு விடுத்தார். எம்.பி.க்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பலன் கிடைக்காததால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

டெல்லி அவசர சட்ட மசோதாவை நேற்று விவாதம் நடத்தி நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால், அம்முயற்சி பலிக்கவில்லை.

58 நோட்டீஸ்கள் தள்ளுபடி

மாநிலங்களவை கூடியவுடன், 267-வது விதியின்கீழ், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த 58 நோட்டீஸ்கள் வந்திருப்பதாகவும், அவை முறையாக இல்லாததால், தள்ளுபடி செய்யப்படுவதாகவும் சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. உடனே, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஜெகதீப் தன்கர் பேச அழைத்தார். கார்கே எழுந்து, தனது நோட்டீசில் 8 அம்சங்களை எழுப்பி இருப்பதாக கூறினார்.

அதற்கு ஜெகதீப் தன்கர், கார்கேவுக்கு கொடுத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறினார்.

அதையடுத்து, அமளியை தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பிரதமர் மோடி சபைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உத்தரவிட முடியாது

அதற்கு ஜெகதீப் தன்கர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் கேட்பதுபோல், சபைக்கு வருமாறு பிரதமருக்கு நான் உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டால், நான் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாண உறுதிமொழியை மீறியதாக ஆகிவிடும்.

இதற்கு முன்பு அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இல்லை. இனிமேலும் பிறப்பிக்கப்படாது. பிரதமர், தானே விரும்பி சபைக்கு வருவது அவரது உரிமை.

உங்களிடம் சட்ட நிபுணர்கள் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால், அரசியல் சட்டப்படி நான் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சொல்வார்கள் என்று அவர் கூறினார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு

பிற்பகல் 2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஆனால், மணிப்பூர் பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, சபையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்ஸ், மல்லிகார்ஜுன கார்கேவை பேச அழைத்தார். நாட்டில் அமைதியின்மை நிலவுவதாக கார்கே கூறினார்.

குறுக்கிட்ட ஹரிவன்ஸ், மசோதா மீது பேசுமாறு கூறி, மேற்கொண்டு பேச அனுமதி மறுத்தார். இதையடுத்து, 2-வது தடவையாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதா நிறைவேறியது

பின்னர், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, சிறிது நேர விவாதத்துக்கு பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

லித்தியம் உள்ளிட்ட 6 அணு கனிமங்களையும், தங்கம், வெள்ளி, வைரம், துத்தநாகம் உள்ளிட்ட கனிமங்களையும் வெட்டி எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்க இம்மசோதா வழிவகுக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.