சென்னை: என்எல்சி பணியின்போது சேதமான நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஆக.6-ம் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று என்எல்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் செப்.15-க்குள் அறுவடை பணிகளை முடித்து, அந்த நிலங்களை என்எல்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 2-ம் கட்ட சுரங்க விரிவாக்கபணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் கடந்த 2007-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டன. மழை காலத்தில் என்எல்சி சுரங்கம்மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்கும் நோக்கில், பரவனாறு ஆற்றை ஆழப்படுத்தி, இந்த நிலங்களின் வழியே மாற்று வழித்தடத்தில் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்த பணியின்போது, ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களில் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரங்களால், நன்கு விளைந்த நெற்பயிர்கள் நாசமாகின. இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாமக தரப்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கெனவே கையகப்படுத்திய நிலத்தை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேலாகஎன்எல்சி நிர்வாகம் பயன்படுத்தாததால், அந்த நிலத்தை தன்னிடமே திருப்பி ஒப்படைக்க கோரி, பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து என்எல்சி மற்றும் தமிழக அரசும், செப்.15-ம் தேதிக்குள் அறுவடை பணிகளை முடித்து நிலத்தை ஒப்படைப்போம் என விவசாயிகள் தரப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
என்எல்சி தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க என்எல்சி முடிவு செய்துள்ளது. இத்தொகை காசோலையாக கடலூர் சிறப்பு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்படும். அவரிடம் இருந்து விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
மனுதாரர் தரப்பில் பாமக வழக்கறிஞர் கே.பாலு: அறுவடை நேரத்தில் பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்துள்ளனர். எனவே, ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலத்துக்கு உரிய இழப்பீட்டு தொகை பலருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர், ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் இழப்பீடு கோருகிறார். என்எல்சி ரூ.30 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது.
எனவே, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்தை இழப்பீடாக கணக்கிட்டு, ஆக.6-ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதேபோல, விவசாயிகளும் செப்.15-ம் தேதிக்குள் அறுவடை பணிகளை முடித்து, நிலங்களை என்எல்சி வசம் ஒப்படைக்க வேண்டும். என்எல்சி அதன்பிறகு காவ்வாய் பணிகளை தொடர எந்த தடையும் இல்லை’’ என்று உத்தரவிட்டுள்ளார்.
தக்காளியா, மாம்பழமா?
வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் கே.பாலு (பாமக) குறுக்கிட்டு, ‘‘இந்த நிலங்களில் நெல்லுக்கு பதில் தக்காளி பயிரிட்டிருந்தால், இந்நேரம் கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும்’’ என்றார்.
அதற்கு நீதிபதி சுப்பிரமணியம், ‘‘அப்படி நீங்கள் தக்காளி சாகுபடி செய்திருந்தால், அதை இந்நேரம் அரசே கொள்முதல் செய்திருக்கும்’’ என்றார்.
அதற்கு தமிழக அரசின் கூடுதல்தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘அவர்கள் தக்காளி பயிரிட மாட்டார்கள். மாம்பழம்தான் பயிரிட்டிருப்பார்கள்’’ என்று கூறியதும் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.