Doctor Vikatan: சிறு வயதிலேயே பூப்படையும் குழந்தைகளுக்கு பீரியட்ஸை தள்ளிப்போடுவதற்கான சிகிச்சைமுறை என்ன? இதனால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா… ?
Eswari P, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
சிறு வயதிலேயே பூப்பெய்துவதை மருத்துவ மொழியில் ‘ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி’ (Precocious puberty) என்று சொல்வோம். 8 வயதிலேயே பெண் குழந்தைக்கு அக்குள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி, மார்பக வளர்ச்சி, பீரியட்ஸ் வருவது போன்றவை இதன் அறிகுறிகள். 8 வயதுக்குள் இவையெல்லாம் நிகழ்ந்தால்தான் அதை ‘ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி’ என்று சொல்வோம். 8 வயதுக்குப் பிறகு வந்தால் அதற்கு சிகிச்சைகள் தேவைப்படாது.
இந்த பாதிப்பில் ‘சென்ட்ரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி ( central precocious puberty) மற்றும் ‘பெரிஃபெரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி’ (peripheral precocious puberty) என இருவகை உண்டு. நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் ஜிஎன்ஆர்ஹெச் Gonadotropin hormone-releasing hormone (GnRH) என்ற ஹார்மோன் சுரக்கும்.
இது மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்களை தூண்டும். எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்கள் இரண்டும் சினைப்பையைத் தூண்டுவதால் அதிலுள்ள புரொஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் விடுவிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகுதான் முதல் பீரியட்ஸ் வருகிறது. இதை ‘ஹைப்போதலாமஸ் பிட்யூட்டரி ஒவேரியன் அக்செஸ்’ என்று சொல்வோம். இது அடைபட்ட நிலையில் இருக்கும். அந்த அடைப்பு நீங்கி, ஹைப்போதலாமஸ் பகுதியில் ஜிஎன்ஆர்ஹெச் சுரக்கத் தொடங்குவதுதான் பூப்பெய்துவதில் நிகழ்கிறது. இந்தச் செயல் வழக்கமாக 8 வயதுக்குப் பிறகுதான் நடக்கும்.
ஏதோ காரணத்தால் இந்த நிகழ்வானது 8 வயதுக்கு முன்பே நிகழ்ந்தால் அதை ‘சென்ட்ரல் ப்ரிகாஷியஸ் பியூபெர்ட்டி’ என்று சொல்வோம். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் பல நேரங்களில் தெரியாது. சில நேரங்களில், மூளையில் கட்டி இருந்தாலோ, வேறு பாதிப்பு இருந்தாலோ இப்படி ஏற்படலாம்.
அடுத்தது பெரிஃபெரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி… மூளை தவிர்த்து, சினைப்பையில் இருந்து வேறு காரணங்களால் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதைக் குறிப்பது இது. ஈஸ்ட்ரோஜென் க்ரீம் அல்லது சப்ளிமென்ட் உபயோகிப்பதால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். சினைப்பையில் கட்டிகள் இருந்தாலும் இப்படி ஆகலாம்.
நம் உடலிலுள்ள அட்ரீனல் சுரப்பியிலிருந்து அட்ரீனல் ஹார்மோன் சுரக்கும். அதனால் பாலியல் தொடர்பான வளர்ச்சி சீக்கிரமே ஆரம்பிப்பதும் இதற்கொரு காரணம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி போன்றவை சீக்கிரமே ஏற்படும். சக குழந்தைகள் இவர்களை கேலி, கிண்டலுக்கு உள்ளாக்குவார்கள். இவர்களில் சிலருக்கு சிகிச்சை தேவைப்படும்.
சிகிச்சையைத் தொடங்கும் முன் குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். குடும்ப பின்னணி, அவர்களின் பூப்பெய்திய வயது போன்றவற்றைக் கேட்டறிவதோடு, குழந்தையின் ரத்தத்தில் ஹார்மோன் அளவுகள் போன்றவற்றை செக் செய்வார்கள். சினைப்பை ஆரோக்கியத்தையும் பார்ப்பார்கள். மூளையில் ஏதேனும் கட்டி இருக்கிறதா என்பதற்கான எம்ஆர்ஐ பரிசோதனையும் தேவைப்படலாம். கட்டிகள் இருந்தால் அறுவை சிகிச்சை அல்லது வேறு தீர்வுகள் மூலம் அதை அகற்றுவதன் மூலம்தான் இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும்.
காரணமே கண்டுபிடிக்க முடியாத ‘சென்ட்ரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி’ பிரச்னைக்கு நேரடியாக சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்படும் பிரத்யேக ஊசியின் மூலம் ஹார்மோன் சுரப்புகள் கட்டுப்படுத்தப்படும். அதனால் பூப்பெய்துவதற்கான அறிகுறிகள் மறையத் தொடங்கும். இந்தச் சிகிச்சையை நீண்ட நாள்கள் கொடுக்க முடியாது. அந்தக் குழந்தை பூப்பெய்தும் வயதை எட்டும்வரை கொடுக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு எலும்புகளின் முதிர்ச்சியைத் தெரிந்துகொள்ள எக்ஸ் ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். இந்த ஊசி எடுக்கும்போது எலும்புகளின் அதீத முதிர்ச்சியும் தடுக்கப்படும்.
சிலருக்கு வியர்த்துக்கொட்டுவது, மன அழுத்தம் போன்றவை இருக்கலாம். அவை ஹார்மோன்கள் குறைவதன் விளைவாக இருக்கலாம். இந்தக் குழந்தைகளுக்கு கவுன்சலிங்கும் தேவைப்படலாம். எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஜிஎன்ஆர்ஹெச் அனலாக் ஊசிகளும் (GnRH) analogue injections) பரிந்துரைக்கப்படும். இப்போது இது இம்ப்ளான்ட்டாகவும் வருகிறது. அதையும் பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பியல் மருத்துவரின் ஆலோசனையோடு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.