![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691048894_NTLRG_20230803102809969306.jpg)
தனி மனிதனாகப் போராடும் மலையாள 'ஜெயிலர்' இயக்குனர்
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' தமிழ்ப் படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில் மலையாளத்தில் 'ஜெயிலர்' என்ற மற்றொரு படமும் வெளியாகிறது. சாகிர் மாடத்தில் இயக்கத்தில் தயன் சீனிவாசன், மனோஜ் கே ஜெயன், திவ்யா பிள்ளை மற்றும் பலர் அப்படத்தில் நடித்துள்ளார்கள்.
தன்னுடைய மலையாள 'ஜெயிலர்' படத்தின் தலைப்பை 2021ம் ஆண்டிலேயே பதிவு செய்துள்ளதாகவும், அதனால் தமிழ் 'ஜெயிலர்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் அதன் இயக்குனர் சாகிர் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கை குறித்து இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் கொச்சியில் கேரள திரைப்பட வர்த்தக சபை முன்பு தனி மனிதனாகப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். “மலையாள சினிமாவைக் காப்பாற்றவும், மலையாள ஜெயிலர்-ஐ காப்பாற்றவும்” என இரண்டு பதாகைகளை ஏந்தி குரல் கொடுத்துப் போராடியுள்ளார்.
“தமிழ் 'ஜெயிலர்' கேரளாவில் பல தியேட்டர்களில் வெளியாகிறது. எங்களது மலையாள 'ஜெயிலர்' படத்திற்கு இதுவரையில் 40 தியேட்டர்கள்தான் கிடைத்துள்ளது. பல சென்டர்களில் எனது திரைப்படத்தை வாபஸ் வாங்கிவிட்டு தமிழ் 'ஜெயிலர்' படத்தைத் திரையிடுகிறார்கள். எங்களுக்குக் குறைந்தபட்சம் 75 தியேட்டர்கள் தேவை. இல்லையென்றால் எனக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும். தமிழ் 'ஜெயிலர்' படத்தை 300, 400 தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள். இந்நிலை தொடர்ந்தால் எனக்குக் கிடைத்துள்ள 40 தியேட்டர்களையும் இழக்க நேரிடும். தமிழ் 'ஜெயிலர்' படத்தையும் பார்க்கட்டும், அதேசமயம், எனது மலையாள ஜெயிலர்' படத்திற்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.