ரஜினியின் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 170’ படத்திற்கான வேலைகள் மும்முரமாகி விட்டன.
ரஜினிக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார் எனச் சொல்லியிருந்தோம். அதன்படி, ‘தலைவர் 170’ல் அமிதாப்பச்சன் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இப்போது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ரஜினிக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். லைகா தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 170’ படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகிறது. இந்தியில் இருந்து அமிதாப்பச்சன் கமிட் ஆகியிருக்கிறார். 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஹும்’ (HUM) படத்திற்குப் பிறகு அவருடன் இணைவதால் ரஜினியும் மகிழ்ச்சியில் இருக்கிறார். அமிதாப்பைத் தொடர்ந்து படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற பேச்சு உலவியது. ஆனால், சூர்யாவை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சிக்கே யாரும் செல்லவில்லை.
அதைப் போல ரஜினியின் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விக்ரம்.., ‘தலைவர் 170’ல் சீயான் விக்ரம்’ எனத் தகவல்கள் பரவின. அப்போது விக்ரம் தரப்பில் இது குறித்து விசாரித்த போது, அவரிடம் ரஜினி’ படத்தில் நடிக்கக் கேட்டது உண்மைதான் என்றும், ஆனால் படத்தில் ரஜினி, அமிதாப் என ஜாம்பவான்கள் இருக்கும் போது, அதில் தனக்கான ஸ்கோப் எப்படி இருக்கும்? என நினைத்தே விக்ரம் மறுத்துவிட்டார் என்றார்கள்.. மற்றபடி அவர் அதிக சம்பளம் கேட்டார் என்றும், பெரிய சம்பளம் என்பதால் அவரை கமிட் பண்ணாமல் விட்டுவிட்டனர் என்கிற தகவலில் எல்லாம் உண்மை இல்லை.
அதுசரி! இப்போது நானி நடிக்கிறாரா? இல்லையா? எனக் கேட்கிறீர்களா? நானி குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இவை. ”நானியிடம் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். அவரிடம் இப்படிக் கேட்டதும் அவருக்கும் மகிழ்ச்சி தான். நானி, தெலுங்கில் மட்டுமல்ல, ‘தசரா’ படத்திற்கு பின்னர் பான் இண்டியா நடிகராகவும் வலம் வருகிறார். அவருக்கென தனி பிசினஸும் இருக்கிறது. இந்நிலையில் ரஜினி, அமிதாப் இணையும் படத்தில் தானும் இருந்தால், தனக்கான ஸ்கோப் எப்படி இருக்குமோ? எனத் தயங்கியே வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் நானி. படத்தில் நானியின் கதாபாத்திரம் பேசக்கூடிய பாத்திரம் என்பதும், இதில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால் இப்போது இன்னொரு பெரிய ஸ்டாரிடம் பேசி வருகின்றனர்” என்கிறார்கள்.