முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓபி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் ஓபி ரவீந்திரநாத் வாக்குக்கு பணம் அளித்ததாகவும், வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகவும் தெரிவித்திந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓபி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என கடந்த மாதம் தீர்ப்பபு வழங்கியது.
மேலும் இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபி ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓபி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் 2 வாரங்களில் இரு தரப்பினரும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சதீமன்றம் வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஓபி ரவீந்திரநாத் தேனி தொகுதி எம்பியாக தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு நிம்மதி அடைந்துள்ளது.