மனிதர்களுக்கும் விலங்கு, பறவைகள் போன்ற உயிரினங்களுக்கும் இடையேயான நட்பு எப்போதுமே ஸ்பெஷல்தான். அது நாயாக இருக்கலாம், பூனை, ஆடு, பசு, கிளி போன்ற எந்த உயிரினமாக இருந்தாலும் அன்பு என்பது ஒன்றுதான்.
அவ்வப்போது இப்படியான உயிரினங்களுடன் மனிதர்களின் உறவு குறித்த வீடியோக்கள், செய்திகள் வெளியாகி வைரலாவது வழக்கம்தான். அப்படியானதொரு செய்தி தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் டாமோவில் உள்ள தீபக் சோனி என்பவர், காணாமல் போன தன் கிளியைத் தேடிக்கொண்டுள்ளார். இதற்காக அவர் அந்த நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். தன் அன்பான கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்கள் அல்லது அது தொடர்பான தகவல் தருபவர்களுக்கு ரூ.10,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும் அந்த சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன தன் கிளி குறித்த அறிவிப்புகள், நகரம் முழுவதும் சென்றடைய ஆட்டோ மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் வாகனங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். மேலும் இதற்காக தனி ஆட்டோ ஏற்பாடு செய்து அதன்மூலம் நகரம் முழுவதும் ஒலிபரப்பியும் வருகிறார்.
“ஆகஸ்ட் 1-ம் தேதி இரவில் இருந்து கிளியைக் காணவில்லை. அது என் குடும்பத்தினர் அனைவராலும் விரும்பப்பட்டது. என் தந்தை அதை வெளியே எடுத்தபோது எதிர்பாராதவிதமாக கிளி பறந்துவிட்டது. அதனால் சரியாக பறக்கக்கூட முடியாது என்பது மிகவும் கவலையாக உள்ளது. கிளி இதேபோல் கடந்த வாரம் பறந்து சென்று மீண்டும் வந்துவிட்டது, ஆனால் இப்போது அதை நாங்கள் பார்க்கவேயில்லை. தயவுசெய்து என் கிளியைக் கண்டுபிடிக்க உதவுங்கள்.
தெருநாய்கள் குரைத்ததால் அதற்கு பயந்து கிளி பறந்து சென்றுவிட்டது. அதிகாலை 2 மணியில் இருந்து என் குடும்பத்தினர் அனைவரும் கிளியைத் தேடி வருகிறோம். கிளியை யாரேனும் பார்த்தால் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணுக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது போல ரொக்கப் பரிசை வழங்குகிறோம். தேவைப்பட்டால் மேலும் பணம் செலுத்தவும் தயாராக உள்ளேன். என் செல்லப் பறவையை மட்டும் திரும்ப பெற விரும்புகிறேன் ” என்று தீபக் கூறியுள்ளார். காணாமல் போன பச்சைக் கிளி, தீபக் சோனியின் குடும்பத்துடன் 2 வருடங்களாக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.