துபாய்: அமீரக திமுக பொறுப்பாளரும், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானின் சமூக சேவையை பாராட்டி துபாயில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற விழாவில் இந்திய தூதர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் விவகார செயலாளர் அப்துல்லா லஷ்காரி ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.
பணி நிமித்தமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று அங்கு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டவர்கள், போலி ஏஜெண்ட்கள் மூலம் துபாய்க்கு சென்று அங்கு ஊதியமும், உணவும் கிடைக்காமல் தவித்தவர்கள் என பலருக்கும் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் என்ற முறையில் எஸ்.எஸ்.மீரான் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
மேலும், துபாயில் உயிரிழக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் இந்திய தூதரகம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறார்.துபாயில் உள்ள இந்தியாவை சேர்ந்தவர்கள் தன்னார்வத்துடன் சமூக நலப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அங்குள்ள இந்திய தூதரகத்தின் பணிச்சுமை குறைவது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் அமீரகத்தில் உள்ள பல்வேறு இந்திய முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், சமூக செயற்பாட்டார்களும் கலந்து கொண்டனர்