மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தண்டனை நிறுத்திவைப்பு – சுப்ரீம் கோர்ட்டு உத்த…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவதூறு வழக்கு

இந்த தேர்தலின்போது அவர் நாடு முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். இதில்கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசிய உரைசர்ச்சையை கிளப்பியது. அந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிவது ஏன்?’ என கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான வீடியோஅப்போது வெளியாகி வைரலானது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்ற அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ராகுல் காந்தி தகுதிநீக்கம்

இந்த வழக்கில் 4 ஆண்டு கால விசாரணைக்குப் பின்னர், கடந்த மார்ச் 23-ந் தேதி நீதிபதி எச்.எச்.வர்மா தீர்ப்பு வழங்கினார். அதில் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499, 500 ஆகியவற்றின் கீழ் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த அவர், இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு கூறினார்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதில் அடுத்த அதிரடியாக, 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிஎம்.பி. பதவி மறுநாளே பறிக்கப்பட்டது. மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர், சில வாரங்களில் டெல்லியில் தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வீட்டையும் காலி செய்தார்.

சிறைத்தண்டனை உறுதி

இதற்கிடையே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சூரத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடுசெய்தார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கினார். ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். இந்த வழக்கு அங்கேயே நிலுவையில் உள்ளது.

அதேநேரம் ராகுல் காந்தியின் சிறைத்தண்டனையை உறுதி செய்த குஜராத் ஐகோர்ட்டும், அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இது காங்கிரசார் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைப்பு

ஆனாலும் இந்த விவகாரத்தில் மனம் தளராத ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். கடந்த மாதம் 15-ந்தேதி தாக்கல் செய்த மனுவில், தனது தண்டனைக்கு தடை விதிக்கப்படாவிட்டால், கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் விசாரித்தனர். இதில் மனுதாரர் புர்னேஷ் மோடிக்கும் நோட்டீஸ் அனுப்பி அவரது வாதங்களையும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பின்போது நீதிபதிகள் மேலும் கூறியதாவது:-

காரணம் தெரிவிக்கவில்லை

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 (அவதூறு)-ன் தண்டனையை பொறுத்தவரை, அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை கோர்ட்டு நீதிபதியும் அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகளை வழங்கி உள்ளார். ஆனால் அவமதிப்பு வழக்கு ஒன்றில் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கியதை தவிர, வேறு எதையும் இந்த அதிகபட்ச தண்டனை வழங்கியதற்கான காரணமாக விசாரணை நீதிபதி தெரிவிக்கவில்லை. இந்த அதிகபட்ச தண்டனை காரணமாக மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகள் (தகுதி நீக்கம்) நடைமுறைக்கு வந்துள்ளன. ஒருநாள் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு இருந்தாலும் இது நிகழ்ந்திருக்காது.

வாக்காளர்களின் உரிமை பாதிப்பு

விசாரணை கோர்ட்டு நீதிபதியாவது, அதிகபட்ச தண்டனை விதிக்க சில காரணங்களைக்கூறி இருந்தார். ஆனால் மேல்கோர்ட்டும், ஐகோர்ட்டும் தடையை நிராகரிக்கும் தீர்ப்புக்காக ஏராளமான பக்கங்களை செலவழித்து இருந்தாலும், இந்த அம்சங்கள் எதுவும் அவர்களின் உத்தரவில் கருத்தில் கொள்ளப்படவில்லை.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், அதைத்தொடர்ந்து நிகழ்ந்த அவரது தகுதி நீக்கமும் அவர் பொதுவாழ்வில் தொடர்வதற்கான உரிமையை பாதிப்பது மட்டுமின்றி, அவரை தேர்வு செய்த வாக்காளர்களின் உரிமையையும் பாதிக்கிறது. அவர் கூறியிருந்த வார்த்தைகள் நல்ல ரசனையுடன் இல்லை என்பதில் சந்தேகமில்லை. அதைப்போல பொது வாழ்வில் இருப்பவர்கள் பொது உரைகளை செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டும், அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான காரணத்தை விசாரணை நீதிபதி தெரிவிக்கவில்லை என்பதாலும், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

கடுமையான குற்றம் செய்யவில்லை

முன்னதாக இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, ராகுல் காந்தி கடுமையான குற்றம் எதுவும் செய்யவில்லை எனவும், பா.ஜனதா தொண்டர்களால் அவருக்கு எதிராக பல வழக்குகள் போடப்பட்டிருந்தாலும் அவர் ஒரு போதும் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறினார்.b மேலும் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடியின் அசல் குடும்பப்பெயர் ‘மோடி’ அல்ல என்று கூறிய சிங்வி, அவர் ‘மோத் வனிகா சமாஜை’ சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மகேஷ் ஜெத்மலானி, ராகுல் காந்திக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

சபாநாயகர்புதுப்பிக்கலாம்

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததன் மூலம் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய நிம்மதி ஏற்பட்டு உள்ளது.

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவரது தகுதி நீக்கம் செல்லாதது ஆகிறது. அவரது எம்.பி. பதவியை மக்களவை சபாநாயகரே இனி புதுப்பிக்க முடியும். அல்லது கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி சபாநாயகரிடம் ராகுல் காந்தி மனு செய்து எம்.பி. பதவியை மீண்டும் பெறலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சி கரைபுரண்டோடி வருகிறது. பல இடங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் இதை கொண்டாடி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.