அண்ணாமலைக்கு எதிராக காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி: அதிகபட்சம் 5 தானாம்!

அதிமுக பொதுச் செயலாளர்

கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லி சென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நாடு முழுவதும் பல கட்சிகள் வந்திருந்த அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மோடிக்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் பல மாதங்களாக உரசல்கள் இருந்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்த பின்னர் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

அண்ணாமலையின் நடை பயண தொடக்க விழாவுக்கு அழைப்பு வந்த போதும் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை, அதிமுக சார்பாக ஆர்.பி.உதயகுமாரை மட்டும் அனுப்பினார். செல்லும் வழிகளில் திமுகவை விமர்சித்து பேசுவது போல் அவ்வப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் விமர்சிக்கிறார்.

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜு ஆகியோரும் காட்டமாக பதிலளித்து வருகின்றனர். நடை பயணம் முழுவதும் அதிமுகவுடன் உரசலுடனே சென்றால் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரும் இணைந்து எப்படி வாக்கு கேட்பார்கள் என்பது தான் இப்போது எழும் முக்கிய கேள்வியாக உள்ளது.

பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர நினைக்கிறாரா, வேண்டாம் என்கிறாரா அவரது எண்ணவோட்டம் என்ன என்பது குறித்து விசாரித்தோம்.

ஓபிஎஸ் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது

“மக்களவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் இந்த முறை அமைச்சரவையில் கட்டாயம் இடம் கேட்க வேண்டும் என்பதிலும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள பெரிய கட்சி அதிமுக தான்.

எனவே கூட்டணியில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு அதிகம் உருவாகும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே பாஜகவுடன் ராசியாகிவிட்டால், அவர்கள் கேட்கின்ற எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், அதேபோல் உரிமையுடன் சில தொகுதிகளை கேட்டுப்பெறவும் வாய்ப்பு உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்ச்சர்கள் அண்ணாமலையை விமர்சித்துப் பேச எடப்பாடி பழனிசாமி க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார். எனவே பாஜகவுடன் எலியும் பூனையுமாக இருந்துவிட்டு கடைசி நேரத்தில் கை குலுக்கிக்கொள்வோம். இதனால் மீண்டும் ஐந்து தொதிகளுக்குள் பாஜகவை அடக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கிறார்” என்று கூறுகின்ன்றனர் அதிமுக உள்விவகாரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.