நேற்று நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டத்தில் மத்திய உள்துறை அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு இந்தி போட்டியாக இல்லை. இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்புகள் எதுவுமின்றி இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” என்று பேசியிருப்பது எதிர்க்கட்சிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்கூட, “இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது. இந்தித் திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்போதும் வென்றே இருக்கிறது” என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், கண்டனம் தெரிவித்து, அமித் ஷாவை எச்சரித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு, மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல. தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க-வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.