காணிகள் தொடர்பான சட்டத்தை மாற்றி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நில அளவை அதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது…
மொனராகலை மாவட்ட செயலகத்தில் (03) இடம்பெற்ற “புதியதோர் கிராமம் – புதியதோர் தேசம்“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-
நாம் நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்தமை பற்றி அனைவருக்கும் தெரியும். இலங்கை பாரிய சர்வதேச பிரச்சினைக்கு முகம்கொடுத்தது. நெருக்கடியை வெற்றிகொள்ள சர்வதேச ஆதரவும் நட்புறவும் எமக்குத் தேவை.
இன்றும் கூட எமது மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் பணம் வேண்டும்.
கடந்த வருடம் நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது, இந்த பெரும் நெருக்கடியை எதிர்கொண்ட போது இருந்த நிலைமையை எங்களால் பெருமளவு தளர்த்த முடிந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அரச ஊழியர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், எமது நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்த நாடுகள் இவ்வளவு விரைவாகத் தலை தூக்கியது கிடையாது. என்னை சந்திக்கும் ஒவ்வொரு வெளிநாட்டுத் தலைவர்களும் இலங்கையைப் பற்றி பெருமையடைகிறோம் என்று கூறுகிறார்கள்.எமது நாட்டு விவசாயிகளை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம்.
உலகமே உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, எமது விவசாயிகள் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் விவசாய நிலங்களுக்குச் சென்று நல்ல விளைச்சலைக் கொண்டுவந்தனர். விவசாய நிலத்தின் குறைபாடுகளை களைந்து அதிக விளைச்சலுக்கு வழிசெய்வது அவசியம்.
நிதி நெருக்கடியின் மத்தியில் இருந்த நிலைமைகளில் இருந்து இன்று இலங்கை சர்வதேச நம்பிக்கையைப் பெற முடிந்துள்ளது. பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அது சாத்தியமானது. சர்வதேச அளவில் வங்கி பரிவர்த்தனைகள் நின்றுவிட்டதை மறந்துவிடாதீர்கள். இப்படியான ஒரு சர்வதேச பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை அனைவரும் புரிந்து கொள்வது கடினம் என்றாலும், ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட செயலாளர்கள், மாகாண சபை அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
வெல்லஸ்ஸ பூமி எமது நாட்டின் சுதந்திரத்தின் எதிரொலியாகும். கடந்த காலத்தை நினைவுகூரும் இந்த மண்ணுக்கு எமது நாட்டின் ஒவ்வொரு அரசாங்கமும் கடன்பட்டிருக்கிறது. இது இக்கிராமத்திலிருந்து பிரதேச செயலகங்கள் ஊடாக உணவுப் பாதுகாப்பு தொடர்பான பத்து துறைகளுக்கு வழியமைக்கும் பயணம்.
நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதே ஜனாதிபதி அவர்களுடையவும் நான் உட்பட எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் முயற்சியாகும். நாம் உணவில் தன்னிறைவு அடைதல் என்பது, உணவு கொண்டு வருவதற்காக டொலர்களைப் பயன்படுத்துவது நிறுத்தப்படுவதாகும். ரூபாவில் உணவு உற்பத்தியாவதாகும். இதற்கு மேலும் இதனை விளக்கத் தேவையில்லை. நாம் விரும்பும் இலக்கை அடைய முடியாமல் பல சிக்கல்கள் உள்ளன.
இப்பகுதிகளில் விவசாயம் செய்து வருபவர்களுக்கு நிலங்களை வழங்கும் நடவடிக்கையை விரைவாக நிறைவு செய்ய வேண்டும். காணிப் பதிவுகளில் கொடுக்கல் வாங்கல்செய்த ஒரு யுகம் எம்மிடம் இருக்கவில்லை. 1840க்குப் பின்னர் தான் காணி உறுதிகள் என்ற ஒன்று உருவானது. ஆங்கிலேய ஆட்சி எமக்குக் கற்றுத் தந்ததைத் தவிர அந்தக் காலத்தில் அப்படி ஒன்று இருக்கவில்லை. எமது அரச நிருவாகத்தினால் கிராமம் கிராமமாக நாடு வளர்ச்சி அடைந்தது. ஆங்கிலேய ஆட்சி நிலச் சட்டங்களுடன் பல்வேறு சட்டங்களை விதித்தது.
அந்தச் சட்டங்களினால் இன்று வெல்லஸ்ஸயில் வாழும் பெருமளவிலான மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சட்டங்களை மாற்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நில அளவை அதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம்.
பிரதேச செயலாளரின் ஊடாக அடிப்படை அளவீடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் இம்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும். நாம் எதிர்நோக்கும் நீர் முகாமைத்துவப் பிரச்சினையைப் பற்றிப் பேசினால், இதனை ஒரு விசேட காலமாகக் கருதி நீர் முகாமைத்துவத்தில் கவனம் செலுத்துமாறு கள விடயங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை நிறுவிய போது நான் உயர் கல்வி பிரதி அமைச்சராக இருந்தேன். இந்த பல்கலைக்கழகத்தின் இரண்டு வளாகங்களை மேல் ஊவா மற்றும் கீழ் ஊவாவில் நிறுவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்தார்.
ஜனாதிபதி கோட்டபாயவுடன் இணைந்து தேசிய பாடசாலைகளை ஆரம்பிக்க வருகைதந்த போது, ஊவா பல்கலைக்கழகத்தின் விசேட வளாகம் ஒன்று இப்பிரதேசத்திற்கு வழங்கப்படும் என குறிப்பிட்டார். இது போன்ற மாவட்ட கலந்துரையாடல்கள் எமது கல்வித்துறையை திட்டமிடுவதில் பங்களிக்கின்றன.
இந்த நாட்டின் மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை நிறுத்த முடியாது. ஜனாதிபதி உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு மாதங்களுக்கு இதனை நீடிப்பது குறித்து கலந்துரையாடினர். மோதலைத் தோற்றுவிக்க இதுவே சிறந்த நேரம் என்று சிலர் நினைக்கலாம்.
மோதலை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்கி அதன் தொகையை அதிகரிக்கும் முயற்சியே இது. தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரச அதிகாரிகள் என்ற ரீதியில் பொறுப்பை நிறைவேற்றுமாறு உங்களிடம் விசேடமாக கேட்டுக் கொள்கிறேன்.
ஏராளமான அரச ஊழியர்களை விடுவிக்கவும், நீக்கவும் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. நாங்கள் அதைச் செய்யவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். நாம் அனைவரும் கைகோர்த்து, எமது நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளைப் போல உள்நாட்டில் ஒரு திட்டத்தை நோக்கி முன்னோக்கிச் சென்றால், ஒரு நாடாக நாம் உணவில் தன்னிறைவு அடைய முடியும்.
இந்நிகழ்வில் ஊவா வெல்லஸ்ஸ பிரதம சங்கநாயக தேரர் சங்கைக்குரிய கந்த உட பங்குவே சுதம்ம தேரர், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்திர ராஜபக்ஷ, அசோக பிரியந்த, ஜானக வக்கும்புர, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான குமாரசிறி ரத்நாயக்க, யதாமினி குணவர்தன, தர்மசேன விஜேசிங்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, மொனராகலை மாவட்ட செயலாளர் எஸ்.பி. ரத்நாயக்க ஜனாதிபதியின் ஆலோசகர் பி.எம். எஸ். படகொட உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.