ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வெல்லாத அணிகளில் ஆர்சிபியும் ஒன்று. 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று வரும் அந்த அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என 15 ஆண்டுகளாக இளவு காத்த கிளியாக அந்த அணியின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு என்னவோ இன்னும் கனவாகவே இருக்கிறது. தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கூட கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒரு வீரராக விளையாட தொடங்கிவிட்டார். அந்த அணியில் விளையாடிய வீரர்கள் மற்ற அணிகளுக்கு சென்ற பிறகு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை உச்சி முகர்ந்துவிட்டனர். ஆனால் ஆர்சிபிக்கு இன்னும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
3 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 5 முறை பிளே ஆப் சுற்றுக்கும் அந்த அணி தகுதி பெற்றிருந்தாலும், சாம்பியன் ஆக வில்லை. ஆர்சிபியை பொறுத்தவரை ஒருமுறையாவது ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பல்வேறு மாற்றங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் இம்முறை அந்த அணியின் இயக்குநராக இருந்த மைக் ஹெசன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளராக ஆன்டி பிளவரை நியமித்துள்ளனர்.
(@RCBTweets) August 4, 2023
கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் இருந்தார். அவரது பயிற்சியின் கீழ் அந்த அணி இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும், அவரை அந்த அணி நிர்வாகம் நீக்கியது. மேலும், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜஸ்டின் லேங்கர் அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டடார். இதனைத் தொடர்ந்து ஆன்டி பிளவரை தங்கள் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க ஆர்சிபி விரும்பியது. அதற்காக அவரை அணுகியபோது ஆன்டி பிளவரும் ஒகே சொன்னதால் உடனடியாக ஒப்பந்தம் செய்துவிட்டது ஆர்சிபி.
(@RCBTweets) August 4, 2023
இது குறித்து ஆர்சிபி அணி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், டி20 உலகக் கோப்பை வென்ற அணியின் பயிற்சியாளரான ஆண்டி ஃபிளவரை ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக வரவேற்கிறோம். ஐபிஎல் மற்றும் பல்வேறு டி20 லீக் அணிகளின் பயிற்சியாளராக இயங்கிய அவரது அனுபவம் ஆர்சிபி அணிக்கு பெரிதும் உதவும் என தெரிவித்துள்ளது. இது குறித்து ஆன்டி பிளவர் பேசும்போது, டூப்ளசி உடன் மீண்டும் இணைவதில் தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும், ஆர்சிபி அணியின் இயக்குநராக இயங்கிய மைக் ஹெசன் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆகியோரின் பணியை மிகவும் மதிப்பதாகவும் கூறியுள்ளார்.