நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ள `குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதுதவிர வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு தனக்கு ‘மயோசைட்டிஸ்’ (Myositis) எனும் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாகவும், அதில் போராட்டமான நாள்களைக் கடந்து, இப்போது முழுமையாக மீளும் நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பகிர்ந்திருந்தார். இதனால் சில காலம் அவர் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து ஓய்விலும் இருந்தார். பிறகு, இப்போதுதான் வரிசையாகப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/06/Snapinsta_app_267602240_317746070201351_1843048487815508506_n_1080.jpg)
இந்நிலையில் சமந்தா, ஓர் ஆண்டுக்காலம் வெளிநாட்டில் தங்கி ஓய்வெடுப்பதற்காகவும், சிகிச்சைக்காகவும் முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரிடமிருந்து ரூ.25 கோடி ரூபாய்க் கடன் வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. டோலிவுட் வட்டாரத்தில் இது பெரும் பேசுபொருளாக மாறியது. ஆனால், இதுகுறித்து சமந்தா தரப்பிலோ, வேறு எந்த நடிகரிடமிருந்தோ அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது இது முற்றிலும் வதந்திதான், தான் யாரிடமும் எந்தக் கடனும் வாங்கவில்லை என விளக்கமளித்துள்ளார் நடிகை சமந்தா.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள சமந்தா, “மயோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? அப்படியென்றால் உங்களை யாரோ ஏமாற்றியிருக்கின்றனர் என்றுதான் அர்த்தம். அதை விடக் குறைவான பணத்தைத்தான் என் சிகிச்சைக்காகச் செலவு செய்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. என்னுடைய கரியரில் நான் என் உழைப்பு மூலமாகவே அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியும். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Untitled_design__77_.png)
மேலும், “மயோசிடிஸ் என்பது ஒரு உடல்நலப் பிரச்னை. அதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சைத் தொடர்பாகச் செய்திகளை வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள். நோய் மற்றும் சிகிச்சை குறித்த பயத்தை விதைக்காதீர்கள்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.