வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தில், தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வ ஆய்வு நேற்று துவங்கியது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி வளாகம்.
மேல்முறையீடு
கடந்த 17ம் நுாற்றாண்டில் இங்கு இருந்த கோவிலை இடித்து, அதன் மீது இந்த வளாகத்தை முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டியதாக, ஹிந்துக்கள் சிலர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, அந்த வளாகத்தில் அறிவியல் பூர்வமாக விரிவான ஆய்வு நடத்தும்படி தொல்லியல் துறைக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, அஞ்சுமன் இன்டேஸாமியா மஸ்ஜித் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, ஞானவாபி வளாக நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அஞ்சுமன் இன்டேஸாமியா மஸ்ஜித் குழு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன், நேற்று காலை 7:00 மணிக்கு தொல்லியல் துறையினர், ஞானவாபி வளாகத்தில் ஆய்வு பணிகளை துவக்கினர்.
தொல்லியல் துறையைச் சேர்ந்த, 43 பேர் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வு, ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை நடக்கும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்த ஹிந்து தரப்பு மனுதாரர்களின் பிரதிநிதிகள், ஆய்வின் போது அந்த வளாகத்தில் இருந்தனர். அதே சமயம், அஞ்சுமன் இன்டேஸாமியா மஸ்ஜித் குழுவினர், வளாகத்திற்குள் செல்லாமல் புறக்கணித்தனர்.
அஞ்சுமன் இன்டேஸாமியா மஸ்ஜித் குழு செயலர் சையத் முகமது யாசின் கூறியதாவது:
தொல்லியல் ஆய்வுக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு விசாரணைக்கு வரும் வரை ஆய்வை ஒத்திவைக்கும்படி கோரினோம்.
ஆனால், தொல்லியல் துறையினர் அதை கேட்கவில்லை. எனவே, ஆய்வு நடக்கும் போது, எங்கள் தரப்பினர் யாரும் உடன் இருக்கக்கூடாது என்பதை ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை
நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய தொல்லியல் ஆய்வு, வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி நிறுத்தப்பட்டு, பின்னர் தொடர்ந்து நடந்தது.
இதற்கிடையே, அஞ்சுமன் இன்டேஸாமியா மஸ்ஜித் குழு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உ.பி., அரசு மற்றும் தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ”ஞானவாபி வளாகத்தில் எவ்வித அகழ்வாராய்ச்சிகளும் இல்லாமல், கட்டடத்துக்கு சேதம் விளைவிக்காமல் இந்த முழு ஆய்வும் செய்து முடிக்கப் படும்,” என்றார்.
அஞ்சுமன் இன்டேஸாமியா மஸ்ஜித் குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுஸேபா அஹ்மதி வாதிடுகையில், ”தொல்லியல் துறையின் ஆய்வு, 500 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்ற வரலாற்றை தோண்ட முயற்சிக்கிறது. இது, கடந்த கால காயங்களை மீண்டும் நினைவூட்டும் செயல்,” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தொல்லியல் ஆய்வுக்கு அனுமதி அளித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. அகழ்வாராய்ச்சியின்றி இந்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் செய்து முடிக்கப்பட வேண்டும்.
தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் மீதான இறுதி முடிவை மாவட்ட நீதிபதி அறிவிப்பார்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்