புதுடெல்லி: உத்தராகண்ட் கோயிலில் பிரதமர் மோடியின் சகோதரியும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரியும் சந்தித்துப் பேசி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம் பாவ்ரி கார்வால் நகரில் உள்ள நீல்காந்த் மகாதேவ் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரி வசந்திபென் தனது கணவருடன் கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார்.
அங்குள்ள சிவனை வழிபட்ட பிறகு கோத்தாரி கிராமத்தில் உள்ள பார்வதி கோயிலுக்கும் சென்றுள்ளார். அங்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரி சசி தேவியை வசந்திபென் சந்தித்துப் பேசி உள்ளார்.
இவர்களுடைய சந்திப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், பார்வதி கோயில் வளாகத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்றனர். பின்னர் இருவரும் பார்வதி கோயிலுக்குள் சென்று பிரார்த்தனை செய்கின்றனர்.
இந்த வீடியோவை பாஜக பிரமுகர் அஜய் நந்தா பகிர்ந்துள்ளார். அதனுடன், “பிரதமர் மோடியின் சகோதரி வசந்திபென் மற்றும் உ.பி. முதல்வர் யோகியின் சகோதரி சசியும் சந்தித்துக் கொண்டது எளிமை, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.