அரியானா வன்முறை: மொபைல் இணைய சேவைகளுக்கான தடை நீட்டிப்பு.!

சண்டிகார்,

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு, விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

கலவரத்தின்போது வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல் மந்திரி மனோகர் லால் கட்டா தெரிவித்து இருந்தார். நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரியானா அரசு, நூ மற்றும் பல்வால் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளுக்கான தடையை ஆகஸ்ட் 8 வரை நீட்டித்துள்ளது. நூ மாவட்டத்தில் அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க இந்த உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.