Shimmasanam!: Thrilling students Dinamalar: Educational festival that rocked the hall: The discussion overflowed with joy | சிம்மாசனம்!:  மாணவர்களை சிலிர்க்க வைத்த தினமலர்: அரங்கத்தை அதிர செய்த கல்வி திருவிழா

பெங்களூரு: கர்நாடகாவில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் மாநில அளவில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியருக்கு, ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், ‘சிம்மாசனம்’ என்ற பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. அரங்கமே அதிரும் வகையில், இந்த கல்வி திருவிழா கோலாகலமாக அமைந்தது. சிறப்பு விருந்தினர்களுடன் நடத்திய கலந்துரையாடலில், மாணவர்களின் சந்தோஷம் கரை புரண்டோடியது.

கர்நாடகாவில், ஒரு காலத்தில் நுாற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகள் இயங்கி வந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் மொழியில் படிக்க ஆர்வம் காண்பித்தனர். பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தினர். ஆனால், படிப்படியாக தமிழ் பயிலும் ஆர்வம் குறைந்து, பல பள்ளிகள் மூடப்பட்டன. பணி ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இதற்கு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு தான் காரணம் என்று, அரசு தரப்பில் கூறப்படுகிறது.

முக்கிய கடமை

எனவே, கர்நாடகாவில் தமிழ் பயிலும் மாணவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்த, ‘தினமலர்’ நாளிதழ் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இதன்படி, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் மாநில அளவில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியருக்கு, ‘சிம்மாசனம்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா நடத்த முடிவானது.

இந்நிலையில், பெங்களூரு தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், ‘சிம்மாசனம்’ விழா நேற்று கோலாகலமாக நடத்தப்பட்டது. கர்நாடகாவில் ஒரு தமிழ் நாளிதழ், மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன் முறை.

சிறப்பு பரிசுகள்

இந்த விழாவில், மாநில அளவில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியருக்கு கையடக்க கணினி, ஸ்மார்ட் வாட்ச், விருது, புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

விருது பெற்ற மாணவர்களை, சிம்மாசனம் போன்ற நாற்காலியில் அமர வைத்து, சிறப்பு விருந்தினர்கள் கவுரவித்தனர்.

‘இஸ்ரோ’ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தமிழரான ஐ.ஏ.எஸ்., அதிகாரிராம்பிரசாத் மனோகர், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு என, மூன்று துறை சார்ந்த சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ் மொழியின் அருமை குறித்தும், தமிழால் எவ்வாறு உயர்ந்தோம் என்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினர்.மேலும், மூவரும் மாணவர்களுடன் கலந்துரையாடி, நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் பல கேள்விகள் கேட்டனர்.மாணவர்களும் ஆர்வமுடன் பதில் அளித்து, உடனுக்குடன் சிறப்பு பரிசுகள் பெற்றுமகிழ்ந்தனர்.

வினாடி – வினா

வினாடி – வினா போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்ற ஆறு மாணவர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் பரிசு பெற்ற போதும், சிறப்பு விருந்தினர்கள் பேசிய போதும் அரங்கில் நிறைந்திருந்தோர் கை தட்டிஆரவாரம் செய்தனர்.

மொத்த அரங்கமே மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சிறப்பு அழைப்பாளர்கள் என நிறைந்து காணப்பட்டது. விழாவின் ஆரம்பம் முதல் நிறைவு வரை, அரங்கத்தில் கூட்டம் குறையவே இல்லை. அனைவரும் ஆர்வத்துடன் நிகழ்ச்சி முழுவதையும் பார்த்து ரசித்தனர்.

நிகழ்ச்சியில் மாணவர்களின் சந்தோஷம் கரை புரண்டோடியது. இதுபோன்று மேலும் பல கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தும்படி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டனர். கன்னட மொழி பாடல், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய சிம்மாசனம் விழா, தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

பரிசு பெற்றவர்கள் யார் யார்?

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் தமிழில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த, பெங்களூரு தியாகராஜநகர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில் குமரன் உயர்நிலைப் பள்ளி மாணவி சல்மா பானு; இரண்டாம் இடம் பிடித்த டிக்கென்சன் சாலை ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜெய்விஸ்வா; மூன்றாம் இடம் பிடித்த இதே பள்ளியின் காவ்யா.

பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் தமிழில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த ஆனேக்கல் விஸ்வசேத்தனா பி.யு.சி., கல்லுாரி மாணவி சுஷ்மிதா.

மேலும், இரண்டாம் இடம் பிடித்த ஜோகுபாளையா மாநகராட்சி மகளிர் பி.யு.சி., கல்லுாரி மாணவி ஐஸ்வர்யா; மூன்றாம் இடம் பிடித்த இதே கல்லுாரியின் ஜெயபிரியா; கோலாரின் மாலுார் கிரைஸ்ட் பி.யு.சி., கல்லுாரி மாணவி குஸ்மா ஆகியோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வர இயலாத மாணவ – மாணவியருக்கு விருதுகள் நேரடியாக வழங்கப்படும்.

latest tamil news

ஊக்கப்படுத்தியோர்

மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், துணை முதல்வர் சிவகுமாரின் செயலர் ராஜேந்திர சோழன், பெங்களூரு தமிழ் சங்கம், மனோஜ் ஏ.இ.எஸ்., சிப்ரியம் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணா பாலசுந்தரம், தொழிலதிபர் தன்ராஜ், லயன்ஸ் கிளப் ஆப் பெங்களூரு தலைவர் பாபு தேவர், தமிழ் ஆர்வலர்கள் ராமச்சந்திரன், எஸ்.எம்.பழனி, தங்கவயல் கமல்நாதன், கே.சி.முரளி, பிரேம்குமார் ஆகியோர் உதவினர்.

மதிய உணவு

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், பிஸ்கட், நந்தினி பாதாம் பால், குடிநீர் பாட்டில், நோட்டு புத்தகம், பேனா அடங்கிய தொகுப்பு பை, மதிய உணவு வழங்கப்பட்டது.

latest tamil news

ஆண்டுதோறும் சிம்மாசனம்

சிம்மாசனம் நிகழ்ச்சி எங்களை ஊக்கப்படுத்தியது. தமிழத்திலேயே தமிழ் மாணவர்களுக்கு, பாராட்டு விழா நடத்துவது இல்லை. ஆனால் கர்நாடகாவில் விழா நடத்திய பெருமை, தினமலரையே சாரும். ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது எனது ஆசை.

– கீதாஸ்ரீ, மாணவி, தாகூர் மெமோரியல் பள்ளி, யஷ்வந்த்பூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.