தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே கைச்சுற்று முறுக்குக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் தனது முறுக்குக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர்கொண்ட கும்பல், அவரது கடைக்குள் புகுந்து செந்தில்நாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செந்தில்நாதனின் அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள கடைக்காரர்கள் முறுக்குக்கடைக்குள் சென்று பார்த்தபோது, வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் செந்தில்நாதன். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீஸார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த நிலையில், செந்தில்நாதனின் உறவினர்கள் உண்மைக்குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் கோரி, மருத்துமனையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்தில்நாதன் முறுக்குக்கடை உள்ள பகுதியில் உள்ள மற்ற கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், பஜாரின் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், 16 வயது மதிக்கத்தக்க 3 இளம்சிறார்கள் ஒரே பைக்கில் வந்து செந்தில்நாதன் கடைக்குள் புகுந்து கொலைசெய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில், அதில் ஒருவர் குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் எனத் தெரியவந்தது.
அந்த மாணவரிடம் போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவரும் கடந்த ஆண்டு அவருடன் 10-ம் வகுப்பு படித்த அவரது நண்பர் மற்றும் உறவுக்கார சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்நாதனைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “செந்தில்நாதனின் முதல் மகன் குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவரின் வகுப்பில்தான் தற்போது சிக்கியிருக்கும் சிறுவனும் படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு டியூசன் வகுப்பில் செந்தில்நாதனின் மகனுக்கும், அந்தச் சிறுவனுக்கும் டியூசன் வகுப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். டியூசன் ஆசிரியர் மட்டுமல்லாமல் பள்ளி ஆசிரியர்களும் இருவரையும் கண்டித்துள்ளனர். தன்னுடைய மகன் தாக்கப்பட்டது தொடர்பாக, செந்தில்நாதன் அந்தச் சிறுவனை அழைத்துக் கண்டித்திருக்கிறார். அப்போது சிறுவன், செந்தில்நாதனை அவதூறாகப் பேசியிருக்கிறான். அந்த கோபத்தில் செந்தில்நாதன் சிறுவனை தலையில் அடித்துள்ளாராம்.
அந்த ஆத்திரத்தை மனதில் வைத்துக் கொண்டு தன் நண்பர் மற்றும் உறவுக்கார சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து, செந்தில்நாதனைக் கொலைசெய்திருக்கிறான் சிறுவன்” என்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இளம்சிறார்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்னொரு சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதியில் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.