சென்னை: வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள மார்க்கெட் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை என உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, இந்து தமிழ் திசை நாளிதழின் உங்கள் குரல் தொலைபேசி சேவையைத் தொடர்பு கொண்டு வி.ஆரா. ரகு ராமன் என்ற வாசகர் கூறியதாவது: வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள மார்க்கெட் சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
அத்துடன், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், சிட்கோ நகர் செல்பவர்களும் மார்க்கெட் சாலை வழியாக செல்கின்றனர். நாள்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்த சாலை ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநகராட்சி தரப்பில் சாலை சீரமைக்கப் படுவதில்லை. மேலும், இச்சாலையில் தெரு விளக்குகளும் இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து, பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் விளைவாக, தற்போது தெரு விளக்குகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ரயில் நிலையங்கள் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ், வில்லிவாக்கம் ரயில் நிலையம் சீரமைக்கப்பட உள்ளது. அப்போது, ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள சாலையும் சீரமைக்கப்படும் என்றனர்.