ஆசியாவின் பழைமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம்களில் ஒன்றாக முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், நூற்றாண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது.
குடியிருப்புப் பகுதிகளில் எதிர்கொள்ல்களை ஏற்படுத்தும் யானைகள் மற்றும் தாயை இழந்த நிலையில் தனியாக தவிக்கும் யானை குட்டிகளை பராமரித்து கும்கி பயிற்சி அளித்து வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த முகாமில், பழங்குடிகளைக் கொண்டே யானைகளை பராமரித்து வருகின்றனர்.
ஆஸ்கர் விருது வென்ற இந்தியாவின் முதல் ஆவணக் குறும்படமான ‘ The Elephant Whisperers’ மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இந்த முகாமிற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வருகைத் தந்து பாகன்களைச் சந்தித்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், நாட்டின் முதல் பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு நேற்று முதுமலைக்கு வருகைத் தந்து ரகு, பொம்மி உள்ளிட்ட வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்தார்.
மேலும் ஆஸ்கர் புகழ் பாகன் தம்பதி பெள்ளி, பொம்மன் மற்றும் இதர பாகன்களிடமும் கலந்துரையாடினார். மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி வந்திருந்த அவர், சாலை மார்க்கமாக தெப்பக்காடு முகாமிற்குச் சென்றார். அங்கிருந்து கிளம்புகையில் மசினகுடியில் காத்திருந்த பொதுமக்களைச் சந்திக்க திடீரென வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார்.
அங்கிருந்த குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து மகிழ்வித்தார். பின்னர் மக்களிடம் விடைபெற்றுச் சென்றார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.