புனே அருகில் உள்ள மலைநகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள லவாசா சிட்டி சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக இருக்கிறது. 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான டி.பி.ஐ.எல் நிறுவனம் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக இங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு 190 முதல் 200 அடியில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது. இச்சிலையை வரும் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடித்து திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்கா நாட்டு தூதர்களை அழைக்கவும் தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்காக அவர் எடுத்து வரும் முயற்சியை கவுரவிக்கும் விதமாக இந்த சிலை பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நாட்டின் தொலைநோக்கு செயல் திட்டம், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு லவாசாவில் அமைக்கப்படும் நரேந்திர மோடியின் சிலை நாட்டின் அழிக்க முடியாத அடையாள சின்னமாக இருக்கும் என்று அதனை நிறுவ இருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் லவாசா ஸ்மாட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் கொடுத்துவிட்டது. இது குறித்து டி.பி.ஐ.எல் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடியின் சிலையோடு, பொழுதுபோக்கு மையம், நினைவு பூங்கா, இந்தியாவின் பாரம்பரியம் முதலியவற்றை வெளிப்படுத்தும் விதமான மியூசியம் மற்றும் கண்காட்சி கூடம் போன்றவையும் அமைக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி இது வரை செய்த சாதனைகள், புதிய இந்தியாவை உருவாக்க அவர் செய்த செயல்கள் இந்த கண்காட்சி மையத்தில் இடம் பெறும்” என்று தெரிவித்தார்.
இது குறித்து டி.பி.ஐ.எல். நிறுவனத்தின் இயக்குனர் அஜய் ஹரிநாத் சிங் கூறுகையில், “நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க பிரதமர் எடுத்து வரும் முயற்சிகள், அவரின் தொலை நோக்கு பார்வைக்காக இந்த சிலை அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார். குஜராத்தில் இருக்கும் ஒற்றுமை சிலையை விட பிரதமர் மோடிக்கு அமைக்கப்படும் சிலை பெரிதாக இருக்கும். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி பெயரில் அகமதாபாத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது சிலையும் அமைக்கப்பட இருக்கிறது. லவாசா சிட்டியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகன் சதானந்த் சுலேயும், தொழிலதிபர் அஜித் குலாப்சந்த் என்பவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். ஆனால் அவர்களின் நிறுவனம் கடனை கட்ட முடியாமல் போனதால் அதனை டி.பி.ஐ.எல். நிறுவனம் வாங்கி லவாசா சிட்டியில் மேலும் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.