நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் மணிப்பூர் விவகாரம் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் ஆளுங்கட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்மீது இன்று வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 10ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் உரிய விளக்கம் அளித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்
இத்தகைய பரபரப்பான சூழலில் ராகுல் காந்தி இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் குறையாக இருந்தது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் மக்களவை செயலகம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டது. இதன்மூலம் உடனடியாக வயநாடு மக்களவை தொகுதி எம்.பி பதவி மீண்டும் ராகுல் காந்தி வசம் வந்தது. இனி நாடாளுமன்றத்திற்கு தாராளமாக செல்ல முடியும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்
ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் மோடி – அதானி நட்பு பற்றியும், பற்றி எரியும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாகவும் கேள்விகளால் துளைத்தெடுக்க முடியும். ஏனெனில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அதானி குழுமம் செய்த முறைகேடுகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மிக முக்கிய பங்கு வகித்தது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுகையில், மோடி உடன் அதானி வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
நீதிமன்ற வழக்கு
இதனால் இவரது பேச்சை முடக்கும் வகையிலேயே 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்கை தூசு தட்டி எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யும் வரை கொண்டு சென்றதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். அதாவது, மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. இதனால் மக்களவை விதிகளின் படி எம்.பியை இழக்க நேரிட்டது.
அதிகபட்ச தண்டனை
குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என முறையீடு, மேல்முறையீடு செய்தும் பலனில்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவை கடந்த வாரம் பிறப்பித்திருந்தது. அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை ஏன்? என்று கேள்வி எழுப்பி வேறு எந்த விளக்கமும் அளிக்காமல் தண்டனையை நிறுத்தி வைத்தது. அப்படியெனில் மீண்டும் எம்.பியாக தொடரலாம். இதையொட்டி மக்களவை செயலாளரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
மீண்டும் எம்.பி ஆனார்
அதை ஏற்றுக் கொண்டு தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெறுவதாக மக்களவை செயலகம் சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் வயநாடு தொகுதி எம்.பி என்ற நிலையை பெற்றுள்ளார். கடந்த 5 மாதங்களாக எம்.பி இல்லாமல் தவித்து வந்த வயநாடு மக்களுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. இனிமேல் தொகுதி சார்ந்த பணிகள் மட்டுமின்றி, ராகுல் காந்தியின் பாஜக டார்க்கெட்டும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.